"'பொல்லார்ட்' இல்லாத மும்பை டீம நெனச்சு பாக்க முடியுமா??.. அவரு அந்த 'டீம்'ல சேர்றதுக்கு காரணமே நான் தான்!.." 'சுவாரஸ்ய' தகவல் பகிர்ந்த 'பிராவோ'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு, வேறு ஏதேனும் நாட்டில் வைத்து நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 5 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை புரிந்துள்ள நிலையில், இந்த வெற்றிகளுக்கு எல்லாம், மிக முக்கிய காரணமாக அமைந்தவர் அதிரடி வீரர் பொல்லார்ட் (Pollard) தான்.
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த அதிரடி வீரரான இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். அதற்கு முன்பு வரை, மும்பை அணி பெரிய அளவில் ஒன்றும் தாக்கத்தை ஐபிஎல் தொடர்களில் ஏற்படுத்தவில்லை.
மும்பை அணியின் தூணாக கருதப்படும் பொல்லார்ட், எப்படி மும்பை அணிக்குள் நுழைந்தார் என்பது குறித்து, மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ (Dwayne Bravo) தற்போது விளக்கமளித்துள்ளார். 2008ஆம் ஆண்டு மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் மும்பை அணிக்காக ஆடி இருந்தார் பிராவோ. இதனைத் தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டில், அவர் சென்னை அணிக்காக ஆட ஒப்பந்தமானார்.
அப்போது பிராவோவிற்கு பதிலாக, மாற்று வீரரைத் தேடியுள்ளது. அந்த சமயத்தில் தான் செய்த உதவி பற்றி பேசிய பிராவோ, 'எனக்கு பதிலாக ஒரு மாற்று வீரர் தேவைப்பட்ட போது, மும்பை இந்தியன்ஸ் அணி என்னை அணுகியது. அப்போது நான், பொல்லார்ட்டின் பெயரை மும்பை அணிக்கு பரிந்துரை செய்தேன். தொடர்ந்து, அவர்கள் பொல்லார்ட்டை தொடர்பு கொண்ட போது, அவர் வேறொரு கிளப்பிற்காக ஆடிக்கொண்டிருந்தார். இதன் காரணமாக, எனக்கு பதிலாக டுவைன் ஸ்மித்தை மும்பை அணி ஒப்பந்தம் செய்தது.
மறு ஆண்டே, சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியா வந்திருந்தார் பொல்லார்ட். அவரை உடனடியாக ஒப்பந்தம் செய்யுமாறு, மும்பை இந்திய அணியைச் சேர்ந்தவர்களிடம் நான் கூறினேன். அதன் பிறகு, ராபின் சிங் மற்றும் ராகுல் ஆகியோர், மும்பையில் இருந்து கிளம்பி, ஹைதராபாத் வந்தார்கள். மும்பை அணியைச் சேர்ந்தவர்கள், ஒப்பந்த கோப்புகளை பொல்லார்டிடம் காண்பித்தார்கள். அதிக தொகைக்கு ஒப்பந்தம் ஆனதும், என்னைப் பார்த்து, "நீ சீரியஸாக தான் சொல்கிறாயா?" என பொல்லார்ட் கேட்டார்.
மேலும் அந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில், அதிரடி ருத்ரதாண்டவம் ஆடினார் பொல்லார்ட். அதன் பிறகுதான், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகும், அவரை திரும்பி பார்க்க ஆரம்பித்தது. மும்பை அணி பொல்லார்ட் பெயரை ஒப்பந்தம் செய்த பிறகு, பொல்லார்ட் பெயர் ஐபிஎல் மினி ஏலத்தில் இடம் பெற்றிருந்தது.
Thank you, agent @DJBravo47! 💙#OneFamily #MumbaiIndians @KieronPollard55 pic.twitter.com/yFXQjkUVJg
— Mumbai Indians (@mipaltan) May 12, 2021
பல அணிகள் போட்டி போட்டாலும், கடைசியில் மும்பை அணியே பொல்லார்டை சொந்தமாக்கியது. பொல்லார்ட் இல்லாமல், மும்பை அணியை நினைத்துக் கூட பார்க்க முடியாது' என பிராவோ சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
