அது சாதாரண சொம்பு இல்ல.. ஒரு கோடி மதிப்பு இருக்கும்.. திரைப்படங்களை மிஞ்சும் ட்விஸ்ட்.. விசாரணையில் தெரிய வந்த உண்மை
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஓசூர்: ஓசூரில் தம்பதிகள் ஒருவர் தங்கள் வீட்டு சொம்பினால் அவர்களே ஏமார்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் புகார்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வாஸ்துசாலா நகரில் வசித்தது வருபவர்கள் ஸ்ரீதேவி, சிவசங்கர் தம்பதிகள். இவர்கள் சில நாட்களுக்கு முன்பு தங்கள் வீட்டிற்கு நான்கு சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் வீட்டில் இருந்த ரூபாய் 1 லட்சம், ஐந்தரை பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன்களை திருடிச் சென்றுவிட்டதாக ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விசாரணை :
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி கைரேகைகளை சேகரித்தனர். அதோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாஸ்சரண் தேஜஸ்வி நேரில் சென்று விசாரணை நடத்தி துணை ஆய்வாளர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர்.
முன்னுக்கு பின் முரணாக பதில்:
இந்நிலையில் நேற்று ஓசூரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பைக்கில் 3 நபர்கள் வந்துள்ளனர். எப்போதும் நார்மலாக போலீசார் விசாரித்த பொது அவர்கள் மூன்று பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தான் அவர்கள் தம்பதி கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரிந்தது.
சொம்பை பறிக்க திட்டம்:
இதில் ட்விஸ்ட் என்னவென்றால் விசாரணையில் ஸ்ரீதேவி, சிவசங்கர் தம்பதிகளின் திட்டம் வெளிவந்துள்ளது. ஸ்ரீதேவி - சிவசங்கர் தம்பதி தங்களது வீட்டில் செம்பு சொம்பில் 1 கோடி ரூபாய் மதிப்புடைய இரிடியம் இருப்பதாக கூறி அதை விற்பனை செய்து தர தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அதை தொடர்ந்து தான் பன்னீர் செல்வம் தன்னுடைய அடியாட்களை அனுப்பி ஸ்ரீதேவி தம்பதியிடம் இரிடியம் இருப்பதாக கூறப்பட்ட சொம்பை பறிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படியே அவர்களும் ஸ்ரீதேவி தம்பதியினரை மிரட்டி அவர்களிடம் இருந்த சொம்பை பறித்துள்ளனர்.
எங்கே அந்த சொம்பு காணவில்லை அதை திருடி சென்றுவிட்டனர் என புகார் அளித்தால், தானும் மாட்டிக் கொள்வோம் என பயந்து அதனை மறைத்த ஸ்ரீதேவி தம்பதியினர் நகை மற்றும் பணம் திருட்டு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் கைது:
மேலும், காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் இரிடியம் இருப்பதாக செம்பு சொம்பை திருடிச்சென்ற தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஜெகசமூத்திரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (39), அரூரை சேர்ந்த வல்லரசு (23), இளையபிரபு (39), ஆகியோர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களோடு தவறான புகார் அளித்த ஸ்ரீதேவி, சிவசங்கர் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்த செம்பு சொம்பையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த திருட்டில் தொடர்புடைய அரூர் பகுதியைச் சேர்ந்த விஜயபிரபாகரன், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்துரு ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
