ரஹானே ‘வேறலெவல்’ ப்ளேயர்.. உங்களுக்குதான் கரெக்ட்டா ‘யூஸ்’ பண்ண தெரியல.. தேர்வுக்குழுவை விளாசி தள்ளிய முன்னாள் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரஹானேவை அணியில் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய அணி வரும் 26-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இதில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரஹானேவின் பெயர் இடம் பெற்றது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
சமீபத்தில் இந்தியா-நியூஸிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது. இதன் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 35 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்கள் மட்டுமே ரஹானே எடுத்தார். கடைசியாக ரஹானே விளையாடிய 10 டெஸ்ட் இன்னிங்சில் 2 முறை மட்டுமே 20 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதனால் இவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஹானே மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தேர்வுக்குழு தலைவருமான எம்.எஸ்.கே பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ரஹானே வெளிநாட்டு மைதானங்களில்தான் சிறப்பாக விளையாடக் கூடியவர். சொந்த மண்ணில் அவரின் ஆட்டம் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும். தேர்வுக்குழு அதிகாரிகள் முதலில் அவரை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வெளிநாட்டு மைதானங்களில் ரஹானே இதுவரை 3000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அதில் அவரின் சராசரி 41.71 ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் 35.23 சராசரி மட்டுமே ரஹானே வைத்துள்ளார்.
குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ரஹானே உள்ளார். இந்தப் புள்ளி விவரங்களை தேர்வுக்குழு அதிகாரிகள் கருத்தில் எடுத்துக் கொண்டு, அவரை வெளிநாட்டு மைதானங்களில் அதிகமாக பயன்படுத்த வேண்டும். உள்நாட்டு போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும்’ என எம்.எஸ்.கே பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.