'அனுஷ்கா ஷர்மாவுக்கு 'டீ' போட்டுக் கொடுப்பது தான் பிசிசிஐ வேலையா'?.. பூதாகரமான சர்ச்சையின் பின்னணி என்ன?.. முன்னாள் தலைவர் பதிலடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறும் போது, கேப்டன் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவை குறிப்பிட்டு வரும் விமர்சனங்கள் குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணியில் 2016 முதல் 2020 வரை தேர்வுக் குழுத் தலைவராக இருந்தவர் எம்.எஸ்.கே. பிரசாத். 2017 சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் யுவராஜ் சிங்கை தேர்வு செய்யாமல் புறக்கணித்தது தான் இவர் சந்தித்த முதல் சர்ச்சை.
அதன் பிறகு, அத்தொடரில் இந்திய அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் சரண்டராக, முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் விமர்சனத்துக்கு ஆளானார். மேலும், 2019 உலகக் கோப்பையில், அம்பதி ராயுடுவை புறக்கணித்து, விஜய் ஷங்கரை தேர்வு செய்து, அவருக்கு 3டி வீரர் என்ற பட்டமும் கொடுத்தார். ஆனால், விஜய் ஷங்கரால், இந்திய அணியில் தாக்கம் ஏற்படுத்த முடியாமல் போக, பெரும் சிக்கலை சந்தித்தார். அதேபோல், 2018-19 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அணித் தேர்வில் விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் ஃபரூக் என்ஜினியர், "நாம் மிக்கி மவுஸ் தேர்வுக்குழுவை கொண்டிருக்கிறோம். விராட் மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு டீ கொடுப்பதில் தான் அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள்" என்று காட்டமாக விமர்சித்து இருந்தார். பரூக்கின் இந்த விமர்சனம், பெரும் வைரலானது.
இதைத் தொடர்ந்து, ESPN Cricinfo-க்கு பேட்டி அளித்த பிரசாத் இவ்விவகாரம் குறித்து மனம் திறந்துள்ளார். அதில், "நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே, ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணிலேயே வைத்து வீழ்த்தியதை பற்றி இங்கு யாரும் பேச மாட்டார்கள். இது எங்களுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில், அணியின் நிர்வாகம் எங்கள் முயற்சிகளை அங்கீகரித்தது.
நிர்வாகம் எங்களை அங்கீகரிப்பது போதும். வெளியாட்கள் என்ன சொன்னாலும், நாங்கள் முடித்த பணிகள் குறித்து அணி நிர்வாகம் அறியும். அவர்களுக்கு எல்லாம் தெரியும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் தேர்வாளர்கள் அனுஷ்காவுக்கு 'டீ' கொடுத்தோம் என்பது எல்லாம் அவர் தேவையில்லாமல் பேசும் விஷயமாகும் என்று பதில் அளித்திருக்கிறார்.