உங்க பின்னாடி ஒரு பெரிய லைன் நிக்குது… ஜாக்கிரதையா ஆடுங்க..!- யாருக்கு சொல்றார் நம்ம ‘பாஜி’..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா- நியூசிலாந்து மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பம் ஆக உள்ளது. இதில் ‘இந்த’ ஒரு பேட்ஸ்மேன் மட்டும் சரியாக விளையாடவில்லை என்றால் அவர் இடத்தை நிரப்ப ஒரு பெரிய வரிசை காத்துக்கொண்டு இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டிக்கு ரஹானே கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து அணியில் கேப்டன் ஆக விராட் கோலி இணைந்து கொள்கிறார். இந்தியா- நியூசிலாந்து டி20 தொடரில் இந்திய அணிக்கு வெற்றிக் கோப்பையைப் பெற்றுத் தந்த டி20 கேப்டன் ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் கேப்டன் ஆக பொறுப்பு ஏற்றுள்ள ரஹானே தனது பேட்டிங் மீது கவனம் செலுத்தி அசத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த டெஸ்ட் சீரிஸில் ரஹானே ரன்களைக் குவிக்கத் தவறினால் அவர் இடத்தை நிரப்ப ஒரு பெரிய வரிசையே காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் கூறுகையில், “விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவருமே அணியில் இல்லாத சூழலால் முதல் போட்டிக்கு மட்டும் ரஹானே கேப்டன் ஆக இருப்பார். அவர் அணியிலேயே இருக்கலாமா வேண்டாமா என்று ஒரு பக்கம் விவாதம் போய்க்கொண்டு இருக்கிறது. சமீப காலமாக அவரது ஆட்டம் சரி வர அமையவில்லை. ரஹானே ஒரு சிறந்த மனிதர், நல்ல கிரிக்கெட் வீரர் தான்.
ஆனால், 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ரஹானேவின் ஆட்டம் சொல்லிக்கொள்வது போல் இல்லை. விராட், ரோகித் மற்றும் டிராவிட் ஆகிய மூவருமே ரஹானேவை தூக்கிப் பிடித்து நிறுத்துகிறார்கள். ஆனால், இந்த டெஸ்ட் சீரிஸில் அவர் ரன்கள் குவிக்கத் தவறினால் நிச்சயம் அவருக்குப் பின் நிற்கும் நீண்ட வரிசை அவர் இடத்தை நிரப்ப வரும். சொல்லப்போனால் சூர்யகுமார் உட்பட பலர் காத்து நிற்கிறார்கள்” எனப் பேசியுள்ளார்.