‘டெஸ்ட தொடரில் தோனியின் 7-ம் நம்பர் ஜெர்சி’... ‘பிசிசிஐ தரப்பிலிருந்து புதிய தகவல்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 24, 2019 07:46 PM
இந்திய- வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில், தோனியின் 7-ம் எண் கொண்ட ஜெர்சியை இந்திய அணியை சேர்ந்த எந்த வீரரும் அணிந்து விளையாட மாட்டார்கள் என பிசிசிஐ தரப்பிலிருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில், ஐசிசி சார்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில், அணியின் லோகோ, அறிமுக எண் மட்டும் கொண்ட வெள்ளை நிற ஜெர்சி அணிவர். பின்புறம் பெயர் மற்றும் எண் இல்லாமல் இருக்கும். ஐசிசி அறிவிப்பின்படி முதன்முறையாக அடுத்த மாதம் துவங்கவுள்ள ஆஷஸ் தொடரில், வீரர்கள் பெயர் மற்றும் எண் கொண்ட ஜெர்சியை முதன்முதலாக அணிந்து விளையாட உள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி, வெஸ்ட் இன்டீசில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதில் இந்திய அணி வீரர்கள் தங்களது பெயர், எண் பொறித்த வெள்ளை நிற ஜெர்சி அணிந்து விளையாடுவர் எனத் தெரிகிறது. இதில் சச்சின் அணிந்த 10-வது எண்ணுக்கு, அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்திய கிரிக்கெட்டில் ஏற்கனவே ஓய்வு தரப்பட்டது. இதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற தோனி வழக்கமாக அணியும், 7-வது எண் கொண்ட ஜெர்சியை, எந்த வீரரும் அணிந்து விளையாட மாட்டார்கள் என பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு எண்கள் இல்லாமல் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கலாம் எனத் தெரிகிறது.
