லிஸ்ட்ல இடம்பிடித்த 3 இந்திய வீரர்கள்.. ஆனா ‘கோலி’ பெயர் மிஸ்ஸிங்.. ரசிகர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த ஐசிசி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்ட கனவு டெஸ்ட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட கனவு கிரிக்கெட் அணியை ஐசிசி வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டுக்கான டெஸ்ட் கனவு அணியை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணியில் இருந்து 3 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா முதலாவதாக இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக விளங்கும் ரோகித் சர்மா, கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். இதனை அடுத்து இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் சதத்தை விளாசினார். இதன்மூலம் கடந்த ஆண்டு 906 ரன்களை குவித்து 47.60 என்ற சராசரியை வைத்துள்ளார்.
இதனை அடுத்து இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியது. அந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா வரலாறு படைத்தது. இந்த தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ரிஷப் பந்த். கடைசி நாள் ஆட்டத்தில் டிரா ஆக இருந்த போட்டியை 89 ரன்கள் விளாசி வெற்றிபெற வைத்தார். இன்றும் இந்த போட்டி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இதனை அடுத்து தமிழகத்தைச் சேர்ந்தவரும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு 9 போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் உலக கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் படைத்தார். பவுலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி 355 ரன்களை அடித்துள்ளார். டெஸ்ட் கனவு அணியில் இடம் பிடித்த ஒரே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் திமுத் கருணாரத்னே, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்ஷேன், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், பாகிஸ்தான் வீரர்களான பாவத் ஆலம், ஹசன் அலி, ஷாகின் அப்ரிடி, நியூசிலாந்து அணியின் கைல் ஜேமிசன் ஆகியோர் இடம்பெற்றனர். இந்த கனவு டெஸ்ட் அணிக்கு நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி இடம்பெறவில்லை. இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.