இப்டி சொந்த டீமுக்கே 'ஆப்பு' வச்சிட்டீங்களே... இதெல்லாம் 'நல்லா' இருக்கா?... கொந்தளிக்கும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 29, 2020 02:16 PM

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 போட்டி தற்போது ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கி நியூசிலாந்தை திணறடித்தனர்.

IND Vs NZ: India Post 179/5 against New Zealand in Hamilton

கடந்த 2 போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆன ரோஹித் அதற்கும் சேர்த்து இன்று வெறித்தனமாக ஆடினார். குறிப்பாக பென்னட்டின் ஒரே ஓவரில் 27 ரன்கள் எடுத்து தான் ஒரு டான் என்பதை அவர் மீண்டுமொருமுறை நிரூபித்தார். தொடர்ந்து 23 பந்துகளை சந்தித்து டி20 போட்டியில் தன்னுடைய 20-வது அரை சதத்தை அடித்த ரோஹித், டி20 போட்டிகளில் அதிவேகமாக 10,000 ரன்கள் கடந்த தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையை பெற்றார்.

கடந்த 2 போட்டிகளில் அரை சதம் கடந்த கே.எல்.ராகுல் இந்த போட்டியில் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோமி வீசிய 9-வது  ஓவரின் கடைசி பந்தை ராகுல் தூக்கியடிக்க அது காலின் முன்ரோவின் கைகளில் தஞ்சமடைந்தது. இதையடுத்து விராட் கோலி தன்னுடைய பழைய தவறை மீண்டும் செய்தார். தனக்கு பதிலாக சிவம் துபேவை இறக்கிவிட அவர் நியூசிலாந்து வீரர்களின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்.

இதனால் மறுமுனையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மாவுக்கு (65) பிரஷர் எகிற தேவையில்லாமல் ஒரு ஷாட் ஆடி பென்னட்டின் பந்தில் சவுத்தியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதே ஓவரின் கடைசி பந்தில் சிவம் துபே(3) சோதியிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதனால் 96 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

எனினும் 4-வதாக களமிறங்கிய விராட், ஷ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து ஓடி, ஓடி ரன்கள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது ஓரளவுக்கு பலனளிக்கத் துவங்கிய நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை 17-வது ஓவரின் கடைசிப்பந்தில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டிம் ஷெப்பர்ட் ஸ்டம்ப்டு அவுட் செய்து வெளியேற்றினார். இதையடுத்து இறங்கிய மணீஷ் பாண்டே, விராட் கோலியுடன் இணைந்து ரன்களை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

மீண்டும் உள்ளே வந்த பென்னட் 19-வது ஓவரின் 5-வது பந்தில் 38 ரன்களில் இருந்த விராட்டை வீழ்த்தி தன்னுடைய 3-வது விக்கெட்டை கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கிய ஜடேஜா 10 ரன்களும், மணீஷ் பாண்டே 14 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாட இருக்கிறது.

முதல் 10 ஓவர்களில் அதிரடியாக இந்திய அணி ஆடியதால் 200 ரன்களை எளிதில் கடந்து விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கோலி செய்த தவறால் அடுத்தடுத்து இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்தது மட்டுமின்றி ரன்களை குவிக்கவும் திணறியது. இதனால் அணியில் உங்களது 3-வது இடத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி கோலியை விமர்சித்து வருகின்றனர்.