அடடா..! ‘4 நாள் லேட்டா அடிச்சிட்டீங்களே’.. ஐபிஎல் ஏலத்தில் யாருமே கண்டுக்கல.. ஆனா இப்போ..! வியந்து பாராட்டிய அஸ்வின்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட நியூஸிலாந்து வீரர் டேவன் கான்வேயின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.
நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதன் முதல் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குப்தில் டக் அவுட்டாக, அவரை தொடர்ந்து செய்ஃபிரெட் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 12 ரன்களில் அவுட்டாகி அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார். இதனால் நியூஸிலாந்து அணி 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த கான்வே மற்றும் பிளிப்ஸ் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, சரிவிலிருந்து அணியை மீட்டது. இதில் பிளிப்ஸ் 30 ரன்களில் அவுட்டாக, கான்வே தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வந்தார். இதனால் நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை குவித்தது. இதில் கான்வே, 59 பந்துகளில் 99 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் வீரர்களுக்கான மினி ஏலத்தில் டேவன் கான்வேயும் தனது பெயரை பதிவு செய்திருந்தார். ஆனால் அப்போது அவரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டுவீட் செய்துள்ளார். அதில், ‘டிவன் கான்வே, 4 நாட்கள் தாமதமாக அடித்துவிட்டீர்களே, ஆனாலும் என்ன ஒரு அடி’ என பாராட்டி அஸ்வின் டுவீட் செய்துள்ளார்.
Devon Conway is just 4 days late, but what a knock 👏👏👏 #AUSvNZ
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) February 22, 2021
இந்த நிலையில் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.
நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் போட்டிப்போட்டு ரூ.14.25 கோடிக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.