‘இனி கிரிக்கெட் ஆடுவனானு எனக்கே டவுட் வந்துருச்சு’.. இப்படி பின்னி எடுப்பார்னு நெனக்கவே இல்ல.. இந்திய பேட்ஸ்மேனை பார்த்து மிரண்டபோன இங்கிலாந்து வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து, இனி கிரிக்கெட் ஆடலாமா இல்லை விட்டு விடலாமா என நினைத்ததாக இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜாக் லீச் தெரிவித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இரட்டை சதம் (218) அடித்து இந்திய வீரர்களை அதிர வைத்தார். அதேபோல் பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிரடி காட்டினார்.
இந்திய அணியைப் பொருத்தவரை புஜாரா, ரிஷப் பந்த், சுப்மன் ஹில், வாசிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் ரோஹித் ஷர்மா, ரஹானே, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி குறித்து இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜாக் லீச் கூறியுள்ளார். அதில், ‘இந்தியாவில் இது என் முதல் கிரிக்கெட் தொடர். ரிஷப் பந்த் இப்படி அதிரடியாக ஆடிவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டியை வென்றபோது உணர்ச்சிகரமாக இருந்தது. அதனால்தான் கிரிக்கெட்டை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். முதல் இன்னிங்ஸில் 8 ஓவர்களில் 77 ரன்களை விட்டுக்கொடுத்த போது இனி கிரிக்கெட்டை ஆடுவேனா என்பதில் நான் உறுதியாக இல்லை. ஆனால் அதன் பிறகு மீண்டெழுந்து அணியின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்தது சந்தோஷமாக இருந்தது’ என ஜாக் லீச் கூறியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் 24 ஓவர்கள் வீசிய ஜாக் லீச் 2 விக்கெட் எடுத்து 105 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இவரது ஓவரை ரிஷப் பந்த் (91 ரன்கள்) நாலாபுறம் சிதறிடித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 26 ஓவர்கள் வீசி 76 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதில் ரோஹித் ஷர்மா, புஜரா உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டை அவர் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.