"உங்கள 'லிஸ்ட்'ல சேத்துக்க முடியாது..." ஐபிஎல் ஏலத்தில் நடந்த 'ட்விஸ்ட்'!... ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தாருயா 'மனுஷன்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த முறை ஐபிஎல் தொடரில் நிச்சயம் இடம்பெற்று விளையாடலாம் என ஆர்வமாக இருந்த முக்கிய வீரர் ஒருவர், ஐபிஎல் ஏலப் பட்டியலில் இடம்பெறாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் 18 ஆம் தேதி சென்னையில் வைத்து நடைபெறவுள்ள நிலையில், இதற்காக 1114 வீரர்கள், தங்களின் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.
இதிலிருந்து இந்த ஐபிஎல் ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. மொத்தம் 292 வீரர்கள் தேர்வாகியுள்ள நிலையில், 164 இந்திய வீரர்களும், 123 வெளிநாட்டு வீரர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஐபிஎல் சீசனில் ஆட, பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஸ்ரீசாந்த் பெயர் இடம்பெறவில்லை. 8 ஐபிஎல் அணிகளும் அவரைத் தேர்வு செய்யவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, ஸ்ரீசாந்த் கிரிக்கெட் ஆட தடை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த தடை காலம் முடிவிற்கு வந்து மீண்டும் முதல் தர போட்டிகளில் ஸ்ரீசாந்த் ஆடி வருகிறார். தடைக்கு பின் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வந்த ஸ்ரீசாந்த், இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதே தனது நோக்கம் என கூறியிருந்தார். இந்த முறை ஐபிஎல் தொடரிலும் ஆட வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக இருந்தார்.
சையது முஷ்டாக் கோப்பை தொடரில் கேரள அணியில் களமிறங்கிய ஸ்ரீசாந்த், சில விக்கெட்டுகளை மட்டும் எடுத்தார். இந்நிலையில், தற்போது ஐபிஎல் ஏலம் பட்டியலில் ஸ்ரீசாந்த் இடம்பெறாமல் போனது, அவருக்கு இடியாக வந்து விழுந்துள்ளது.
இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பேசிய ஸ்ரீசாந்த், 'இதனால் தான் நான் மனம் தளர்ந்து போகவில்லை. எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 38 வயது தான் ஆகிறது. தொடர்ந்து நான் முயற்சிகளை மேற்கொள்வேன். இந்த சீசன் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் அடுத்த சீசன். அதற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பேன்' என குறிப்பிட்டுள்ளார்.
என்ன தான் ஸ்ரீசாந்த் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் இருந்தாலும், அவர் ஐபிஎல் தொடரில் மீண்டும் இடம்பெறுவார் என காத்திருந்த அவரின் ரசிகர்களுக்கு இந்த தகவல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.