‘அப்பவே எச்சரித்தேன்’!.. அடுத்த ‘ஒன்றரை’ மணிநேரத்தில் அவருக்கு அடிபட்டிருச்சு.. இந்திய ‘ஆல்ரவுண்டர்’ பற்றி சொன்ன அக்தர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமூன்று வருடங்களுக்கு முன்பு ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட காயம் குறித்து முன்பே எச்சரித்ததாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), கடந்த சில ஆண்டுகளாகவே சரியாக பவுலிங் செய்ய முடியாமல் தடுமாறி வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது, ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், சில வருடங்கள் ஓய்வில் இருந்தார்.
இதனை அடுத்து அணிக்குத் திரும்பிய ஹர்திக் பாண்டியா, தொடர்ந்து பவுலிங் வீசுவதை தவிர்த்து வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் பவுலிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் ஓவர் கூட அவர் வீசவில்லை. இதனை அடுத்து நடந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் பெரிதாக பவுலிங் செய்யவில்லை. அதனால் அவருக்கு மாற்றாக மற்றொரு ஆல்ரவுண்டரை அணியில் எடுக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்படும் என்று முன்பே எச்சரித்ததாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் (Shoaib Akhtar) பகிர்ந்துள்ளார். அதில், ‘துபாயில் வைத்து பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தேன். நான் வலுவான முதுகு தசைகளை கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் இருவரும் ஒல்லியாக இருந்தனர். அதை பார்த்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அப்போது ஹர்திக் பாண்டியாவிடம் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொன்னேன். ஆனால் அவரோ, நான் நிறைய கிரிக்கெட்டுகள் நன்றாகவே விளையாடி வருகிறேன் என கூறினார். அவர் அப்படி சொன்ன அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் காயம்பட்டு திரும்பினார்’ என சோயப் அக்தர் கூறியுள்ளார்.