‘ஃபிட்னஸ் டெஸ்ட்டில் பாஸ்’!.. நைட்டு வெறித்தனமான ‘பவுலிங்’ ப்ராக்டீஸ்.. இந்திய அணிக்கு 6-வது பவுலர் ரெடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் ஆரம்பமே இந்திய அணிக்கு சோதனையாக அமைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களால் கடைசி வரை ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி போன்ற திறமையான பவுலர்கள் இருந்தும் பாகிஸ்தானை வீழ்த்த முடியாததது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற சமயங்களில் 6-வதாக ஒரு பவுலர் அணியில் இருந்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்தனர். இப்போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டிங் செய்தபோது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால் இரண்டாவது இன்னிங்ஸில் பீல்டிங் செய்யக் கூட அவர் வரவில்லை. அதனால் அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூரை அணியில் எடுக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்றிரவு ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஃபிட்னஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் சிறப்பாக செயல்பட்டதால், பயிற்சியின்போது பந்து வீச அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் பந்து வீசி ஹர்திக் பாண்ட்யா பயிற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவருக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை என தெரிகிறது.
இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை (31.10.2021) நடைபெற உள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பவுலிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தால், நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. ஒருவேளை இந்தியா தோல்வியடைந்தால், அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
