கொஞ்சம் கூட அக்கறை இல்ல..‘ஐபிஎல்’ போதும்னு நெனச்சிட்டாங்க போல.. இந்திய அணியை விட்டு விளாசிய பாகிஸ்தான் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா தொடர் தோல்விகளை சந்தித்து வருவது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் விமர்சனம் செய்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர், இந்திய அணிக்கு மோசமானதாக அமைந்துள்ளது. இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் இந்தியா தோல்விதான் அடைந்துள்ளது. அதில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. உலகக்கோப்பை வரலாற்றில் ஒருமுறை கூட இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது கிடையாது. அந்த வரலாறு இந்த டி20 உலகக்கோப்பையில் தகர்ந்துள்ளது.
அதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடியது. முதல் போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு, இப்போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூஸிலாந்துக்கு எஎதிராக 110 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. இதனை அடுத்து 14.3 ஓவர்களில் 111 ரன்களை எடுத்து நியூஸிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த தொடர் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் (Wasim Akram), இந்திய அணியை விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர்தான் உலகத்திலேயே அதிக பணம் கொழிக்கும் கிரிக்கெட் தொடர். அதனால் ஐபிஎல் தொடரில் மட்டும் நன்றாக விளையாடினால் போதும் என்ற மனநிலைக்கு இந்திய வீரர்கள் வந்துவிட்டனர் என நினைக்கிறேன். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை என்றே தெரிகிறது.
கடைசியாக கடந்த மார்ச் மாதம்தான் இந்திய சீனியர் வீரர்கள் ஒன்றாக இணைத்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் விளையாடினர். அதன்பிறகு தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில்தான் இணைந்து விளையாடுகின்றனர். அதனால்தான் யாரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தீவிரமாக எடுக்கவில்லை என நினைக்கிறேன்’ என வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.