‘இந்தியாவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’.. வலைப்பயிற்சியின் போது தலையில் பலமாக அடித்த பந்து.. விலகும் ஸ்டார் ப்ளேயர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவலைப்பயிற்சியின்போது இந்திய வீரர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் போட்டி தொடங்க உள்ளது. அதனால் இந்திய வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலின் ஹெல்மெட்டில் பந்து பலமாக அடித்தது. இதன்காரணமாக அவரது தலையில் காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் மயங்க் அகர்வால் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே காயம் காரணமாக இந்திய அணியின் சுப்மன் கில் விலகியுள்ள நிலையில், மயங்க் அகர்வாலும் காயத்தால் விலகியது இந்திய அணி நெருக்கடியை கொடுத்துள்ளது.
இந்த தொடருக்கு மாற்று வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மட்டுமே விளையாட முடியும். அதனால், தற்போது இருக்கும் சூழலில், ரோஹித் ஷர்மாவுடன் கே.எல்.ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இரண்டு பேரில் ஒருவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.