என்னங்க சொல்றீங்க..! இத்தனை நாளா ‘காயத்தோட’ தான் விளையாடுனாரா..! ஸ்கேன் எடுக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘ஸ்டார்’ ப்ளேயர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் தொடரில் சமனில் உள்ளன. இதனை அடுத்து 4-வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2-ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடியது. இப்போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் பீல்டிங் செய்தபோது ஜடேஜாவின் வலது கால் மூட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
ஆனாலும் 4-ம் நாள் போட்டி முடியும் வரை ஜடேஜா தொடர்ந்து விளையாடினார். இதனால் காயம் சற்று அதிகமானதாக தெரிகிறது. இதனால் மூட்டுப் பகுதியை ஸ்கேன் செய்வதற்காக ஜடேஜா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஒருவேளை காயத்துக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஜடேஜா விளையாட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
அதனால் அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முந்தைய மூன்று போட்டிகளிலும் அஸ்வின் இடம்பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் அடுத்த இரண்டு போட்டிகளில் அஸ்வின் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.