"இந்த ஒரு 'ஐபிஎல்' ரெக்கார்ட அடிச்சு துவம்சம் பண்ணிடனும்.." மனம் திறந்த 'உத்தப்பா'!.. "அட, இது மட்டும் நடந்தா 'சிஎஸ்கே' மாஸ் காட்டுவாங்க போலயே!!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்காக, கடந்த சில வாரங்களாகவே, சில அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐபிஎல் போட்டிகளுக்காக தயாராக ஆரம்பித்து விட்டனர். கடந்த முறை, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் சென்னை அணி வெளியேறியிருந்த நிலையில், இந்த முறை கோப்பையை கைப்பற்றி அசத்த வேண்டிய முனைப்பில் உள்ளது.
கடந்த ஆண்டு தனிப்பட்ட காரணங்களுக்காக, ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சுரேஷ் ரெய்னா, இந்த முறை மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார். அதே போல, ஐபிஎல் ஏலத்தில், மொயின் அலி, புஜாரா உள்ளிட்ட வீரர்களையும் சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து, டிரேடிங் முறையில் ராபின் உத்தப்பாவையும் எடுத்துள்ளனர்.
தோனியும், உத்தப்பாவும் நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில், இருவரும் ஒரே அணியில் இணைந்துள்ளதால், மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் உத்தப்பா. இந்நிலையில், வரவிருக்கும் ஐபிஎல் தொடரில், 'என்ன சாதனையை முறியடிக்க ஆசைப்படுகிறீர்கள்?' என்ற கேள்விக்கு பதிலளித்த உத்தப்பா, 'ஐபிஎல் சீசனில் 1000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையாளராக இருக்க ஆசைப்படுகிறேன். ஆனால், எனது தனிப்பட்ட குறிக்கோள் என்பது எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிஎஸ்கே அணிக்காக சில வெற்றிகளை பெற்றுத் தர விரும்புவதே ஆகும்' என கூறினார்.
மேலும், ஐபிஎல் தொடர்களில் வலிமைமிக்க அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவதே தங்களது நோக்கம் என்றும் உத்தப்பா தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, 4 சதங்கள் மற்றும் 7 அரை சதங்களுடன் 973 ரன்கள் அடித்திருந்தார். தனி நபர் ஒருவர், ஒரு ஐபிஎல் தொடரில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.