"அவங்கள மட்டும் சாதாரணமா நினைக்காதீங்க... இந்த விஷயத்துல 'தோனி' கில்லாடி.." 'சிஎஸ்கே'வை புகழ்ந்த 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர், துபாயில் நடைபெற்றிருந்த நிலையில், இந்தாண்டுக்கான தொடர் இந்தியாவில் வைத்து வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.
ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில், சில அணிகள் தற்போதே தீவிரமான பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, ராயுடு, சாய் கிஷோர், கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் தற்போதே பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை, அனைத்து முறையும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற பெருமையுடன் இருந்த சென்னை அணி, 13 ஆவது சீசனில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்தை பிடித்தது. அதே போல, தோனியின் கேப்டன்சி மற்றும் பேட்டிங்கிலும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. இதனால், இந்த முறை அனைத்தையும் மாற்றியமைத்து, மீண்டும் தங்களை நிரூபிக்கும் முனைப்பில் சிஎஸ்கே உள்ளது.
இந்நிலையில், சென்னை அணி குறித்தும், அதன் கேப்டன் தோனி குறித்தும், இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கருத்து தெரிவித்துள்ளார். 'சிஎஸ்கே அணியையும், தோனியையும் ஒரு போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. டி 20 போட்டிகளைப் பொறுத்தவரை, கேப்டனின் செயல்பாடு மிகவும் முக்கியம். ஏனென்றால், அவர்களின் ஆட்டம் தவறாக சென்றால், நிச்சயம் தோல்வியில் தான் முடியும். அந்த விஷயத்தில் தோனி கில்லாடி.
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர், களமிறங்கிய சென்னை அணி, ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சிறப்பான கம்பேக் கொடுத்திருந்தது. கடந்த ஆண்டு மட்டும் சிஎஸ்கே அணி மோசமாக செயல்பட்டது என்பது, 13 ஆண்டுகள் சிறப்பாக ஆடி வந்த ஒரு அணிக்கு சகஜமான விஷயம் தான்.
சென்னை அணி தற்போது தீவிர பயிற்சியில் உள்ளது. அவர்கள் ஏலத்தில், நல்ல வீரர்களை எடுத்துள்ளனர். ஆனால், சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கு போட்டிகள் இல்லாத காரணத்தால், மொயீன் அலி மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரை மும்பை மற்றும் பிற மைதானங்களில் எப்படி பயன்படுத்த போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி.
எனினும், இருக்கும் வீரர்களை வைத்து, தோனி சிறப்பாக கையாள்வார்' என பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.