'உலகக் கோப்பையை கையிலேந்தி முத்தமிட வேண்டும்'... 'இந்திய வீரரின் விருப்பம்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | May 14, 2019 12:33 PM
ஐ.பி.எல். கோப்பையை வென்றதைப்போல், உலகக்கோப்பையிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்ற விரும்புவதாக இளம் வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடர் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியில் இடம்பிடித்துள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹெலிகாப்டர் ஷாட் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார். 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன், 402 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 191 ஆகும்.
இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில், 'மும்பை அணியிலிருந்து வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. பெரும்பாலானோர், நாங்கள் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளோம், ஆக நான்காவது முறை அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்றனர். நான் குர்ணாலிடம் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறப்போகிறோம் என்றேன். என்னுடைய உடல் எடை கூட குறைந்துவிட்டது. அப்படியொரு சிக்கலான ஆட்டம் அது. நம்பமுடியாத ஆட்டம்.
நானும், குர்ணால் பாண்டியாவும் சின்ன வயதிலிருந்து, நல்ல ஆட்டத்தை இணைந்து வெளிபடுத்த விரும்பினோம். நாங்கள் ஐ.பி.எல்.லில் இல்லாமல் இருந்திருந்தாலும், மும்பை அணிக்காக விளையாடவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டிருப்போம்' என்றார். ‘இந்த ஐ.பி.எல். சீசனில் நான் சிறப்பாக விளையாடினேன். ஆனால், தற்போது இதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். ஐ.பி.எல். கோப்பையை வென்று முத்தமிட்டதுபோல், உலகக்கோப்பையையும் வென்று முத்தமிட விரும்புகிறேன்’ என்றார்.
