"என்னங்க, எல்லா பக்கமும் லாக் பண்றீங்க??.." 'ஹர்திக்' முன்னால் இருக்கும் மிகப்பெரிய 'சிக்கல்'.. "எப்படி தான் கடந்து வர போறாரோ??.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | May 15, 2021 06:53 PM

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே, வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.

hardik pandya does not fit for T20 and ODI if he not bowl

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரையும் ஆகஸ்ட் மாதம், இந்திய அணி ஆடவுள்ளது. இந்த இரண்டு தொடருக்கான இந்திய அணியையும், கடந்த வாரம் பிசிசிஐ அறிவித்திருந்தது. மொத்தமாக 20 வீரர்களும், மேலும், கூடுதல் வீரர்களாக 4 பேரும் இடம்பெற்றிருந்தனர். இந்த தொடர்களுக்கான இந்திய அணியில், பிரித்வி ஷா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறாமல் போனதை பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதில், ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) பெயர் இடம்பெறாமல் போனதற்கு மிக முக்கிய காரணம், அவரால் பந்து வீச முடியவில்லை என்பது தான். ஆல் ரவுண்டரான ஹர்திக், பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு, அவர் அதிகமாக பந்து வீசுவதில்லை. இங்கிலாந்து தொடரில், சில ஓவர்கள் மட்டும் வீசியிருந்த ஹர்திக், ஐபிஎல் தொடர்களில் சுத்தமாக பந்து வீசவேயில்லை.

ஹர்திக் பாண்டியாவின் ஆல் ரவுண்டர் இடத்தில், தற்போது ஷர்துல் தாக்கூர் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக பங்காற்றி வருகிறார். இதனை, இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணும் தெரிவித்திருந்தார். இதனால், டெஸ்ட் போட்டிகளில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா, ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் தொடர்ந்து களமிறக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தேர்வுகுழு உறுப்பினர் சரண்தீப் சிங் (Sarandeep Singh), 'டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவை புறக்கணிக்கும் தேர்வாளர்கள் முடிவை புரிந்து கொள்ள முடிகிறது. அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, ஹர்திக்கால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை. ஒரு நாள் போட்டிகளில் 10 ஓவர்களும், டி 20 போட்டிகளில் 4 ஓவர்களும் அவர் பந்து வீசினால் தான், குறைந்த ஓவர் போட்டிகளில் தொடர்ந்து இடம்பெற முடியும் என நான் உணர்கிறேன்.

வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் அவர் விளையாட முடியாது. ஒரு வேளை, ஹர்திக் பந்து வீச முடியாமல் போனால், அது அணியின் சமநிலையை பெரிதும் பாதிக்கும். இதனால், அணியில் ஒரு பந்து வீச்சாளரை அதிகம் சேர்க்க வேண்டியதிருக்கும். அப்போது, சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு வீரரை அணியில் எடுப்பதில் சிக்கல் எழலாம். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை போல, நாம் எப்போதும் 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க முடியாது.

தற்போதைய இந்திய அணியில், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஜடேஜா ஆகிய ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர். அதே போல, ஷர்துல் தாக்கூரும் தன்னை ஒரு ஆல் ரவுண்டராக நிரூபித்துக் காட்டியுள்ளார். ஹர்திக் பந்து வீச முடியாமல் போனால், இவர்கள் அனைவரும் அந்த வேலையை செய்வார்கள்' என சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், ஹர்திக் பாண்டியாவின் இடம் கேள்விக்குறி ஆகியுள்ளது. மேலும், தன் மீதான விமர்சனங்களை தகர்த்து, ஒரு முழு ஆல் ரவுண்டராக தன்னை ஹர்திக் நிரூபிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hardik pandya does not fit for T20 and ODI if he not bowl | Sports News.