'இளம் வீரர்கள் வளர வேண்டிய நேரமிது'... ‘தோனியை திரும்பவும் சீண்டிய முன்னாள் வீரர்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Sep 30, 2019 04:53 PM
தோனியை தவிர்த்து நாம் யோசிக்க வேண்டிய தருணமிது என்று முன்னாள் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
மூத்த வீரரான தோனி, உலகக் கோப்பை போட்டிக்கு பின்னான தொடர்களில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த கவுதம் கம்பீர், ‘ஓய்வு என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு. ஒருவர் விளையாட விரும்பும் வரை விளையாட முடியும். ஆனால், அதேநேரத்தில், எதிர்காலத்தையும் கருத வேண்டும். அடுத்த உலகக் கோப்பைத் தொடரில் தோனி விளையாடுவார் என்று நினைக்கவில்லை.
அணியின் கேப்டனாக உள்ளவர்கள், விராட் அல்லது வேறு யாராக இருந்தாலும், இந்த வீரர் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று தைரியமாக எடுத்துக் கூற வேண்டும். அடுத்த 4 மற்றும் 5 ஆண்டுகளுக்கான இளம் வீரர்கள் வளர வேண்டிய நேரமிது. தோனி என்ற ஒரு வீரரை மட்டும் பார்க்காது, இந்திய அணியை பார்க்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. உலகக் கோப்பையில் தோனி இருப்பாரா என்று பார்ப்பதை விடுத்து, அடுத்த உலகக் கோப்பையை வெல்லப் போவது குறித்தே நாம் சிந்திக்க வேண்டும்.
தோனியைத் தாண்டி, இளம் வீரர்களான ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் போன்றோருக்கு தேர்வுக் குழு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து’ என்று தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்புதான், ‘தோனி தான் நினைத்த நேரத்தில் எல்லாம் இந்திய அணிக்காக விளையாட முடியாது’ என்று கவுதம் கம்பீர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.