'அவரும் மனிதன்'தானே... இதெல்லாம் 'சகஜம'ப்பா.. 'தல'க்கு சப்போர்ட் பண்ண 'தாதா'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Apr 13, 2019 06:52 PM
சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையிலான போட்டி நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 151 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய சென்னை அணி வெற்றிப்பெற கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது.
முதல் பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடிக்க மூன்றாவது பந்தில் தோனி ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நேரத்தில் ஸ்டோக்ஸ் வீசிய 4-வது பந்து பேட்டிங் செய்த சண்டனரின் இடுப்புக்கு மேலே சென்றது. அப்போது முதன்மை நடுவர் நோ பால் கொடுக்க, லெக் திசையில் நின்ற நடுவர் இல்லை என்றார். அதனால் சிறிய குழப்பம் ஏற்பட்டது. இதனை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தோனி, திடீரென மைதானத்திற்குள் சென்று நடுவர்களிடம் விளக்கம் கேட்டார்.
தோனி இப்படி நடந்துக் கொண்டது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 'கேப்டன் கூல்' என்று அழைக்கப்பட்ட தோனியா இப்படி நடந்து கொண்டார் என பலரும் வியந்தனர். இருப்பினும், அணியின் கேப்டன் என்ற முறையில் அவர் நடந்துக்கொண்ட விதத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் விதிமுறைகளை மீறி நடந்துக்கொண்டதாக தோனிக்கு ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.
தோனி நடந்து கொண்ட விதம் பெரிய விவாதமாகவே மாறியது. பலரும் விதவிதமான கருத்துக்களைக் கூறினர். இந்நிலையில் தோனி நடுவர்களிடம் நடந்துகொண்ட விதம் குறித்து கருத்து தெரிவித்த கங்குலி 'எல்லோரும் மனிதர்கள்தானே' என்று கூறியுள்ளார். 'ஐ.பி.எல். போட்டி என்றாலே பரபரப்பு இருக்கத்தான் செய்யும்' என்றும் அவர் தெரிவித்தார். இது சென்னை அணி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
