'அட போங்க பா'...'சும்மா அதேயே பேசிகிட்டு'... 'ரெண்டு பேரும்'...'அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Jun 27, 2019 03:15 PM
இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், நான்காவது இடத்தில் யாரை இறக்குவது என்பது பெரும் தலைவலியாகவே உள்ளது. பல வீரர்களை பரிசோதித்து பார்த்த பின்பும் எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடுவதாக தெரியவில்லை.
ஷிகர் தவான் காயம் அடைந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் நான்காவது வரிசையில் இறங்கிய ராகுல் தற்போது தொடக்க வீரராக களமிறங்கி ஆடி வருகிறார். இதையடுத்து காலியான நான்காவது இடத்தில் இறங்கிய விஜய் சங்கரும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. ஒரு சில ஆட்டங்களில் நன்றாக ஆடுகிறார்களே தவிர, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை யாரும் வெளிப்படுத்தவில்லை. எனவே அந்த இடம் பெரிய கேள்வி குறியாகவே உள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர், அனுஷ்மான் கெய்க்வாட், நான்காவது இடத்துக்கு கேதர் ஜாதவ் சரியான வீரர் என அதிரடியாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் '' நான்காவது இடத்திற்கு கேதர் ஜாதவ் தான் சரியான வீரராக இருப்பார். அவர் மிகவும் நுணுக்கமாக விளையாடி ரன்களை குவிக்கும் வீரர். அதோடு தினேஷ் கார்த்திக்கையும் நான்காவது இடத்திற்கு பயன்படுத்தலாம். அவருடைய அனுபவம் பல இடங்களில் கைகொடுத்திருக்கிறது. இந்திய அணி நெருக்கடியில் சிக்கி கொண்டால் அதனை சமாளித்து ஆடுவதில் தினேஷ் கார்த்திக் வல்லவர்.
விராட் கோலி ஆடிக்கொண்டிருக்கும் போது அவருக்கு துணையாக நின்று ஆடுவது முக்கியம். எனேவ நான்காவது இடத்தில் ஆடுபவர் மிகவும் பொறுமையுடன் ஆட வேண்டும். ரிஷாப் பன்ட் நன்றாக விளையாடக் கூடிய வீரர் தான். ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் பொறுமையும் அவசியம். எனவே ரிஷாப் பன்ட் நான்காவது இடத்திற்கு பொருத்தமானவராக இருக்க மாட்டார்'' என அனுஷ்மான் கூறியுள்ளார்.