‘செமி பைனலில் இந்திய அணிக்கு வந்த புது சிக்கல்’.. நியூஸிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பிய நட்சத்திர வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 08, 2019 08:49 PM
இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாட நியூஸிலாந்து அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 -வது சீசன் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் நாளை(09.07.2019) மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியும், நான்காவது இடத்தில் இருக்கும் நியூஸிலாந்து அணியும் மோதவுள்ளன.
உலகக்கோப்பைக்கு முன்னதாக நடந்த பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதனை அடுத்து உலகக்கோப்பை லீக் சுற்றில் இரு அணிகளும் மோத இருந்த போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியை வெல்லும் முனைப்பில் இந்திய அணி இருந்து வருகிறது. அதேபோல் நியூஸிலாந்து அணியும் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு செல்ல தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஃபெர்குசன் அணியில் மீண்டும் இணைந்துள்ளார். இது குறித்து தெரிவித்த நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளர்,‘இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஃபெர்குசன் கண்டிப்பாக விளையாடுவார். தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் 48 மணிநேரம் அவர் ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு சில போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது ஃபெர்குசன் முழு உடற்தகுதியை பெற்றுவிட்டார். இது அவருக்கு முதல் உலகக்கோப்பைதான். ஆனால் இக்கட்டான பல நேரங்களில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடியை கொடுப்பதில் சிறந்தவர்’ என அவர் தெரிவித்துள்ளார்.
