'ஐபிஎல்லில் வரும் அதிரடி மாற்றம்'... 'இனி இதுக்கு மட்டும் தனி அம்பயர்'... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Nov 05, 2019 10:47 PM
அடுத்த வருடத்திற்கான ஐ.பி.எல். போட்டி நெருங்கிவரும் வேளையில், பல அதிரடி மாற்றங்களை நாளுக்கு நாள் ஐ.பி.எல். நிர்வாகம் கொண்டு வருகிறது.

அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டியில் பங்கு பெரும், வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஐ.பி.எல்.லில் நோ பாலைக் கண்காணிக்க, பிரத்யேகமாக ஒரு தனி நடுவரை நியமிக்க ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில், பிரதான நடுவர்கள், சில நேரங்களில் நோ பாலை சரியாக கண்டறிந்து தெரிவிப்பதில்லை. இதனால் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் பல போட்டிகளின் முடிவுகள் தலைகீழாக மாறிய வரலாறுகளும் உண்டு.
கடந்த ஆண்டு கூட மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் மலிங்கா, நோ பாலாக வீசினார். இதனை நடுவர் எஸ்.ரவி சரியாக கவனிக்காததால், பெங்களூரு அணி தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்டது. இதனால் அந்த அணியின் கேப்டன் விராத் கோலி, நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இது ஒன்றும் கிளப் கிரிக்கெட் இல்லை, ஐபிஎல்லில் விளையாடுகிறோம் என்று கடும் கோபமாக கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து இதற்கு முடிவு கட்ட எண்ணிய ஐ.பி.எல். நிர்வாகம் நோபாலைக் கண்காணிப்பதற்காக மட்டும், பிரத்யேகமாக ஒரு தனி நடுவரை நியமிக்கவுள்ளது. இந்த நடுவர் 3-வது நடுவராகவோ அல்லது 4-வது நடுவராகவோ கருதப்படமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஐ.பி.எல். தொடரிலிருந்தே, இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
