"என்ன ஆனாலும் அதை மட்டும் நடக்கவிட மாட்டோம்".. இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லரின் பரபர பேச்சு.. என்னவாம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு T20 உலகக்கோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் விளையாடுவது பற்றி பேசியுள்ளார் இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று சில தினங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதில், குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது பாகிஸ்தான். சிட்னியில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில், இன்று அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. இதனிடையே இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் இந்திய அணியை நிச்சயம் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த பட்லர் இதுபற்றி பேசுகையில்,"நாங்கள் நிச்சயமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இறுதிப் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை. எனவே அது நடக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இந்தியா மிகவும் வலுவான அணி. உலகின் மிகச்சிறந்த மைதானமான அடிலெய்டில் இந்தியா போன்ற திறமை வாய்ந்த அணியை சந்திப்பது சவாலாக இருக்கும். இந்த போட்டி நிச்சயம் மிகச் சிறந்ததாக இருக்கும்" என்றார்.
மேலும் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் சூரிய குமார் யாதவ் பற்றி பட்லர் பேசுகையில்,"அவரது பேட்டிங் பார்க்க அருமையாக உள்ளது. அவரிடம் அனைத்து விதமான ஷாட்களும் இருக்கின்றன. மிகவும் சுதந்திரமான முறையில் பேட்டிங் செய்கிறார். ஆனால், உலகின் எந்த ஒரு பேட்ஸ்மேனின் விக்கெட்டையும் எடுக்க ஒரு வாய்ப்பு மட்டுமே தேவை. அதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.