IPL 2023 ஏலம்.. எங்கே, எப்போ நடக்க போகுது?.. வெளியான தகவல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅடுத்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றவை ஐபிஎல் போட்டிகள். 15வது சீசன் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடந்து முடிந்திருக்கிறது. இதற்கான முதன்மை ஏலம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 23 ஆம் தேதி மினி ஐபிஎல் ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கான ஏலத்தொகை 90 கோடியில் இருந்து 95 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏலத்திற்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 3.45 கோடி ரூபாய் மீதமுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.2.95 கோடி மீதமுள்ளது. அதைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் 1.55 கோடியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 0.95 கோடி ரூபாயும் உள்ளன. கொல்கத்தா ரூ. 0.45 கோடி தொகையை வைத்திருக்கிறது.
நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 0.15 கோடி ரூபாயும் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய மூன்று அணிகள் 0.10 கோடி ரூபாயை கொண்டுள்ளன. இந்த ஆண்டுக்கான ஏலத்தொகை 90 கோடியில் இருந்து 95 கோடி ரூபாயாக அதிகரிகரிக்கப்பட்டிருப்பதால் எந்த அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஆர்வம் எழுந்துள்ளது.
ஒவ்வொரு அணியும் தங்களிடம் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஏலம் இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில் தற்போதைய மினி ஏலம் ஒருநாளில் நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மற்ற செய்திகள்
