"டவுட்டே இல்ல, இவரு தான், ஆனா".. தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் விஷயத்தில் டிவில்லியர்ஸ் சொன்ன பதில்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒட்டுமொத்த கிரிக்கெட் உலகும் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள அரை இறுதி போட்டியை தான் உற்று நோக்கி வருகிறது.
Also Read | "உங்களுக்கு தான் வெயிட்டிங்"..Finalsல் பாகிஸ்தான்.. இந்திய அணியை குறிப்பிட்டு அக்தர் பகிர்ந்த ட்வீட்!!
முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக டி 20 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் முன்னேறி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் அரை இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி, பாகிஸ்தான் அணியை இறுதி போட்டியில் சந்திக்கும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவதற்கு ஒரு வாய்ப்பு உருவாகி உள்ளதால் நிச்சயம் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டியில் பாகிஸ்தானை சந்திக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த டி20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்த இந்திய அணி, இந்த முறை சூப்பர் 12 சுற்றில் 8 புள்ளிகள் பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பலம் வாய்ந்த அணியாகவும் இந்தியா திகழ்வதால் நிச்சயம் அரையிறுதி போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் ஆடும் லெவனில் இடம்பெறும் வீரர்கள் பற்றிய கேள்வி தான் தொடர்ந்து இந்திய அணியை சுற்றி இயங்கி வருகிறது.
தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், சூப்பர் 12 சுற்றில் முதல் நான்கு போட்டிகளில் தினேஷ் கார்த்திக் ஆடி இருந்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி போட்டியில் மட்டும் ரிஷப் பந்த் களமிறங்கி இருந்தார். அப்படி ஒரு சூழலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் ரிஷப் ஆடுவாரா அல்லது தினேஷ் கார்த்திக் ஆடுவாரா அல்லது இரண்டு பேரும் சேர்ந்து ஆடுவார்களா என்ற கேள்வியும் ரசிகர் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் இது பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
"நிச்சயம் கடினமான ஒன்றுதான். ஆனால் என்னை பொறுத்தவரையில் சந்தேகம் இல்லாமல் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருக்க வேண்டும். நாக் அவுட் என்ற நிலையில் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். இதனால் தினேஷ் கார்த்திக் களமிறங்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் இங்கு Curve பால் வீசப்படும் போது ரிஷப் பந்த்தும் அணியில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவருக்கான இடத்தை யார் விட்டு கொடுப்பார் என்று எனக்கு தெரியவில்லை.
ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். அவருக்கு போட்டியை தங்கள் பக்கம் கொண்டு செல்லும் அனுபவமும், தன்னம்பிக்கையும் அதிகம் உள்ளது. வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சை பந்த் எதிர்கொள்வார். தினேஷ் கார்த்திக்கின் அனுபவமும், ரிஷப் பந்த்தின் வெற்றி பெறும் திறனும் வேண்டும்" என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.