4 வருஷத்துக்கு அப்புறம் சென்னையில CSK மேட்ச்.. சேப்பாக்கத்தில் திரண்ட திரையுலக பிரபலங்கள்.. வைரல் புகைப்படங்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை காண ஏராளமான திரையுலக பிரபலங்கள் சேப்பாக்கத்தில் திரண்டிருந்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது.
மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இதில் குஜராத் வெற்றி பெற்றது.
இதனையடுத்து நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோவை எதிர்கொண்டது சென்னை. கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்து சென்னை சேப்பாக்கத்தில் CSK போட்டி நடைபெற்றதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட் - டிவான் கான்வே ஜோடி அபாரமான துவக்கத்தை அளித்தது. பின்னர் வந்த மொயீன் அலி, தூபே தங்களுடைய அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இறுதியாக களத்திற்கு வந்த தோனி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இதன் பலனாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது. இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. அந்த அணியின் மேயர்ஸ் - ராகுல் ஜோடி அபாரமான துவக்கத்தை அளித்தாலும் பவர்பிளே-க்கு பிறகு ஆட்டத்தை சென்னை வசம் கொண்டுவந்தார் மொயீன் அலி.
சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்தது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த போட்டியை காண நடிகர் கீர்த்தி சுரேஷ், யாஷிகா ஆனந்த், வரலக்ஷ்மி சரத்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், சதீஷ், பிரபல டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த், கலக்கப்போவது யாரு பிரபலம் ஷரத், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, குக் வித் கோமாளியில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ரவீனா, நடன இயக்குனர் மணி மற்றும் குரேஷி உள்ளிட்டோர் சேப்பாக்கத்திற்கு வந்திருந்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
