நாங்க வெளையாடததுக்கு 'அவங்க' தான் காரணம்... 'மாபெரும்' தோல்வியால்... மாட்டிக்கொண்டு 'முழிக்கும்' இளம்வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Jan 02, 2020 08:03 PM
இந்திய அணி அடுத்ததாக இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடவிருக்கிறது. இதனால் மார்ச் மாதம் வரையில் இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரஞ்சி போட்டிகளில் இந்திய இளம்வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே ஆகியோர் விளையாட மறுத்தனர். இதனால் மும்பை அணி சர்வீசஸ் அணிக்கு எதிராக மாபெரும் தோல்வியைத் தழுவியது. அதேபோல நவ்தீப் சைனி டெல்லி அணிக்காக ஆட மறுத்தார். டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் மயங்க் அகர்வால் கர்நாடக அணிக்காக 2 போட்டிகளில் மட்டும் பங்குபெற்று மீதமுள்ள போட்டிகளில் ஆட மறுத்துள்ளார்.
இதனால் இந்த நான்கு வீரர்கள் மீதும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. சுமார் 2 வாரங்கள் வரையில் ஓய்வு இருந்தும் இந்திய வீரர்கள் ரஞ்சி போட்டிகளில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து இதுதொடர்பான விசாரணைக்கு மாநில கிரிக்கெட் சங்கங்கள் உத்தரவிட்டுள்ளன. ஆனால் வீரர்கள் தாமாக போட்டியை புறக்கணிக்கவில்லை.
இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் மற்றும் உடற்பயிற்சி நிபுணர் நிக் வெப் இருவரும் தான் அவர்களை போட்டிகளில் ஆட வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஒருபுறம் போட்டிகளில் விளையாடவில்லை என்பதால் நால்வரும், கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மறுபுறம் பிசிசிஐ இதுகுறித்து ஏன் முன்னரே மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தெரிவிக்கவில்லை? என்ற கேள்வி பெரும் விவாதங்களை எழுப்பி இருக்கிறது.