போட்டியை 'புறக்கணித்த' வீரர்கள்... மாபெரும் தோல்வியைத் 'தழுவிய' அணி... விரைவில் பாய்கிறது நடவடிக்கை?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 31, 2019 12:51 AM

ரஞ்சி கிரிக்கெட் போட்டியை இந்திய அணியின் இளம்வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே இருவரும் புறக்கணித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

MCA to Take Action Against Shreyas Iyer, Shivam Dube

இந்திய அணியின் இளம் வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடினார்கள். இதில் ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் பங்களிப்பு இந்திய அணியின் 4-வது பேட்ஸ்மேன் பிரச்சினையை விரைவில் தீர்த்து வைக்கும் என்று பலரும் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு, சிறப்பாக விளையாடினார்.

இதற்குப்பின் வருகின்ற ஜனவரி 5-ம் தேதி தான் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையில் சுமார் 2 வாரங்கள் விடுமுறை இருக்கிறது. ஆனால் இந்த வீரர்கள் இருவரும் ரஞ்சி டிராபியை புறக்கணித்து உள்ளனர். இதனால் மும்பை அணி சர்வீசஸ் அணிக்கு எதிராக சுமார் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியைத் தழுவியுள்ளது.

இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்கம், '' இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் இருவரிடமும் பேசினோம். ஆனால் பிசிசிஐ எங்களை ஓய்வெடுக்க சொல்லியது என்றார்கள். இதுகுறித்து நாங்கள் தேர்வுக்குழுவினரிடம் பேசியபோது நாங்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை என்று தெரிவித்தனர். அப்படி என்றால் அவர்களை ஓய்வெடுக்க சொன்னது யார்?

தேர்வாளர்கள் உட்பட மும்பை கிரிக்கெட் சங்கம் இதை விரும்பவில்லை. இதுகுறித்து நாங்கள் அடுத்த உயர்மட்ட கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம். முதற்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்,'' என தெரிவித்து உள்ளது.