'அவரோட 'இந்த' ஆசைகள் எல்லாம்... கடைசி வரை நிறைவேறாமலேயே போயிடுச்சு'!... கல் நெஞ்சையும் கரைய வைக்கும் விவேக்-இன் மறுபக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழ் மக்களை தனது அசாத்திய நகைச்சுவையால் சிரிக்க வைத்த நடிகர் விவேக்கிற்கு, அவரது ஆசைகள் இறுதிவரை நிறைவேறாமல் போயுள்ளது.
ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை நடிகராக தன்னுடைய ஆளுமையைக் நிலை நிறுத்தி வந்தவர் நடிகர் விவேக்.
தமிழ் திரைப்படத் துறையில் 'சின்னக் கலைவாணர்' என அழைக்கப்படும் விவேக், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை புகுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமின்றி, சிந்திக்கவும் வைத்தவர்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துகளைச் சொல்வதில் வல்லவர், 'கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்'. அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் சொல்லி வந்தார்.
தமிழில் அனைத்து முன்னணி கதாநாயகர்களின் படங்களிலும் நடித்துள்ள விவேக், 'பஞ்ச்' படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்தார் கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை. அதன் பிறகு 'சொல்லி அடிப்பேன்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
கதாநாயகனாக 'நான்தான் பாலா', 'பாலக்காட்டு மாதவன்', 'வெள்ளைப் பூக்கள்' போன்ற படங்களில் நடித்தார்.
முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்தின் ஆரம்பகாலப் படங்களில் விவேக்கின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சிலம்பரசன், சூர்யா, விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, கவுதம் கார்த்திக், ஹரிஷ் கல்யாண் என சென்ற தலைமுறையிலிருந்து இந்தத் தலைமுறை நடிகர்களின் படங்கள் வரை நடித்து முத்திரை பதித்தவர் விவேக். கடந்த வருடம் வெளியான 'தாராள பிரபு' திரைப்படத்தில் கதாநாயகனுக்கு அடுத்து பிரதானமான கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றிருந்தார் விவேக்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே. அப்துல் கலாமின் மிகப்பெரிய அபிமானியான விவேக், கலாம் பெயரில் 'க்ரீன் கலாம்' என்கிற மரம் நடும் முன்னெடுப்பை, கலாமின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கினார்.
அனைத்து முன்னணி நடிகர்களுடனும், புதிய நடிகர்களுடனும் நடித்துவிட்ட விவேக்கிற்கு திரைத்துறைக்கு வந்த நாளிலிருந்தே கமலுடன் சேர்ந்து நடிக்கவேண்டும் எனும் ஆசை இருந்து வந்தது. ஷங்கர் இயக்கத்தில் கமலின் நடிப்பில் 'இந்தியன் 2' தொடங்கப்பட்டது.
'என்னுடைய நீண்டகாலக் கனவு உலகநாயகன் கமலுடன் நடிக்க வேண்டும் என்பது. அந்தக் கனவு 'இந்தியன் 2' வின் மூலமாக நனவாகப் போகிறது. அவருடன் இந்தப் படத்தில் நானும் நடிக்கிறேன்' என்று தன் நீண்ட கால கனவு குறித்து தன் சமுக்க வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, அவர் சினிமாவில் இயக்குநராக சில திரைப்படங்களை இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், அது நிறைவேறவில்லை.
இறுதியாக, தன் வாழ்நாளில் 1 கோடி மரங்களை நட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு பயணித்துக் கொண்டிருந்தவர், தற்போது வரை 33 லட்சம் மரங்களை நட்டுள்ளார். 1 கோடி மரங்களை நட வேண்டும் என்ற அவரது ஆசை அவருக்கு கைகூடாமல் போய்விட்டது.