IND VS ENG : அரை இறுதி நெருங்கும் நேரத்தில் இங்கிலாந்து அணியில் நடக்க போகும் மாற்றம்??.. பரபரப்பை கிளப்பிய தகவல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் வைத்து தற்போது எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதன் முதல் அரை இறுதி போட்டி நடந்து முடிந்துள்ளது.
முன்னதாக சூப்பர் 12 சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது.
இதன் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதி இருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்த நியூசிலாந்து அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக அடி ரன் சேர்த்தது. கடைசி ஓவரின் முதல் பந்தில் இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி, பாகிஸ்தானை இறுதி போட்டியில் எதிர்கொள்ளும். இரு அணிகளும் பலம் வாய்ந்து விளங்குவதால் போட்டி முழுக்க தீப்பறக்கும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
அதே போல, இரு அணிகளும் மிக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அரையிறுதிக்கு முன்பு இங்கிலாந்து அணியில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளராக நடப்பு டி 20 உலக கோப்பை தொடரில் வலம் வந்த மார்க் வுட், தசை பிடிப்பு காரணமாக இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் களமிறங்க மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
150 கி.மீ வேகத்தில் பந்து வீசும் மார்க் வுட், 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில் அவர் மிக முக்கியமான போட்டியில் விளையாட மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல, அவருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டன் இங்கிலாந்து அணியில் இடம் பெறுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மிக முக்கியமான போட்டியில் மார்க் வுட் விலகி உள்ளதாக வெளியான தகவல், இங்கிலாந்து அணிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.