'அப்பா பட்ட அவமானம் என் கண்ணு முன்னாடி வரும்'... 'வானில் பறக்க பூமியில் நடந்த போராட்டம்'... யார் இந்த அஞ்சல் கங்வால் ?
முகப்பு > செய்திகள் > கதைகள்சாதிப்பதற்குப் பணமோ, வறுமையோ தடையில்லை என்பதைப் பலரும் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்து இருக்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் ஒரு வெற்றி சரித்திரத்தை எழுதி இருக்கிறார், டீக்கடை வியாபாரியின் மகள் அஞ்சல் கங்வால். யார் இந்த அஞ்சல்? என்ன சாதித்தார் ? விரிவாகப் பார்ப்போம்.

மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் கங்வால். அவர் அந்த பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் டீ விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். சில காலங்களுக்கு முன்பு கேதார்நாத் நகரம் வெள்ளத்தால் மூழ்கியது. அந்த நேரம் வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானப்படை அதிகாரிகள் துணிச்சலாக மீட்டு பலரது உயிரைக் காப்பாற்றினார்கள்.
இதைக் கண்ணெதிரே பார்த்த அஞ்சல் கங்வாலின் மனதை இந்த சம்பவம் வெகுவாக பாதித்தது. அந்த கணமே தானும் ஒரு விமானப் படை அதிகாரியாக மாற வேண்டும் என அஞ்சல் கங்வால் முடிவு செய்தார். தனது மனதில் தோன்றிய ஆசையை அப்பாவிடம் கூற, வீட்டில் இருக்கும் வறுமையைக் காரணம் காட்டி மகளின் ஆசைக்குத் தடை போடாமல், மகளின் ஆசையை நிறைவேற்ற அவரும் உழைக்கத் தொடங்கினார்.
இதையடுத்து விமானப்படை அதிகாரி ஆவதற்கான தயாரிப்புகளில் அஞ்சல் ஈடுபட ஆரம்பித்தார். ஆனால் முதல் முறை அல்ல, நான்கு முறை தோல்வியைத் தழுவினார். இருப்பினும் தனது விடாமுயற்சியாலும், தந்தையின் ஒத்துழைப்பாலும் இன்று விமானப் படை அதிகாரி என்ற பொறுப்பில் ஏறி சிறகுகள் விரித்துப் பறக்கத் தயாராகிவிட்டார்.
24 வயதான அஞ்சல் கங்வாலால் இந்த இலக்கை அடைய அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு பெரியது. ''தோல்வி என்னைத் துரத்திய போது, என் அப்பா எனக்காகப் பட்ட அவமானங்கள் தான் என் கண்முன்பே வரும். அது தான் என்னுடைய வெற்றிக்கான முதல் விதை'' என அஞ்சல் கங்வால் குறிப்பிட்டுள்ளார். மகளின் வெற்றி குறித்துப் பேசிய அவரது தந்தை, சுரேஷ் கங்வால், ''படிப்பில் படு சுட்டியான அஞ்சல், ஒரு பேஸ்கட் பந்து வீராங்கனையும் கூட. ஆனால் இந்தப் பயணம் அவ்வளவு எளிதாக அமைந்து விட வில்லை. பல முறை என்னால் அவளின் கல்விக்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் போயிருக்கிறது.
அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை கல்விக்கட்டணத்தைப் பள்ளி நிர்வாகம் கேட்கும் என்பதற்காக, பல நாட்கள் ஊருக்குக் கூட வராமல் இருந்திருக்கிறேன். ஆனால் இன்று எங்கள் மகள் சிறகுகளை விரித்துப் பறக்கத் தயாராகி விட்டார், எனக் கண்ணில் பொங்கி வரும் ஆனந்தக் கண்ணீரோடு தனது மகளை அண்ணாந்து பார்க்கிறார்'' சுரேஷ் கங்வால். சாதிக்க வேண்டும் என்ற கனவும், வெறியும் இருந்தால் மட்டும் போதும், எந்த உயரத்தையும் எட்டி பிடிக்கலாம் என நம் கண்முன்பு நிற்கிறார் அஞ்சல் கங்வால்.

மற்ற செய்திகள்
