300 தீவிரவாதிகள் செத்துட்டாங்களா?...நாங்க எப்போ சொன்னோம்?...என்ன இவரே இப்படி சொல்லிட்டாரு!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 04, 2019 11:56 AM

300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று நாங்கள் எப்போது கூறினோம் என மத்திய அமைச்சர் அலுவாலியா கேள்வி எழுப்பியுள்ளார்.விமானப் படை தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்களை மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டு வரும் நிலையில்,அமைச்சரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Has PM Modi himself said 300 terrorists were killed?SS Ahluwalia

40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.இதனிடையே இந்த தாக்குதல் குறித்த ஆதாரங்களை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அலுவாலியா ''எதிரிகளின் எல்லைக்குள் புகுந்து எங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்பதனை காட்டுவதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.அப்பாவி மக்களை கொல்வது எங்களின் நோக்கமே கிடையாது.பயங்கரவாதிகள் அழிக்க படவேண்டும் என்பதுதான் எங்களின் பிரதான நோக்கம்.

மேலும் 300 தீவிரவாதிகள் இறந்ததாக பிரதமர் மோடியோ அல்லது அரசின் செய்தித் தொடர்பாளரோ, பாஜக தேசியத் தலைவரோ எப்போதாவது கூறினார்களா?.மீடியாக்களும், சமூக வலைதளங்களும் தான் அதுபோன்ற கருத்தினை தொடர்ந்து கூறி வந்தன.எனவே அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது'' என  மத்திய அமைச்சர் அலுவாலியா கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ''தீவிரவாதிகள் மீதான விமானப்படை தாக்குதல் குறித்த நிலைப்பாட்டில் இருந்து அரசு பின்வாங்குகிறதா'' என்ற சந்தேகம் எழுவதாக  தெரிவித்துள்ளது.இதனிடையே குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, விமானப் படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.