‘நாங்க இருக்கோம்டா கண்ணா!’.. ‘கெத்தா நடந்து வந்த’ குவாடன்.. பாசத்தால் அழவைத்த உலக மக்கள்!
முகப்பு > செய்திகள் > கதைகள்ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் குவாடன் பெய்ல்ஸ் தனது வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது உருவத் தோற்றத்தை சக மாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்குவதால், தற்கொலை செய்துகொள்வதற்கு தூக்குக் கயிறை தருமாறு தன் அம்மாவிடம் மன்றாடிக் கேட்டு அழுத செயல் உலகையே உருக்கியது.
இதனை வீடியோவாக பதிவு செய்த சிறுவனின் அம்மா, மனம் புண்படுமாறு கேலி செய்வதன் விளைவு இதுதான் என்று அந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். ட்ரம்பின் மகன் எரிக் ட்ரம்ப், நடிகர், நடிகையர் தொடங்கி விளையாட்டு வீரர்கள் வரையிலான உலகப் பிரபலங்கள் குவாடனின் தன்னம்பிக்கையை அதிகரிக்கக் கரம் நீட்டி வருகின்றனர்.
அதன் ஒரு படியாக ஆஸ்திரேலிய ரக்பி அணியை மைதானத்துக்கு வழிநடத்திச் செல்லும் கௌரவத்தை குவாடனுக்கு அளித்துள்ளனர். ரக்பி ரசிகர்களின் கரகோஷத்திற்கு நடுவே, ஒரு கையில் ரக்பி பந்தினையும், இன்னொரு கையில் வீரர் தாம்சனின் கரங்களையும் பற்றிக்கொண்டு கெத்தாக நடந்து வந்தார் குவாடன்.
இதனைத் தொடர்ந்து குவாடனை உலகமே சமாதானப்படுத்தி நெகிழ்ச்சியில் ஆழ்த்தி, நண்பர்களின் கேலியால் அழுத குவாடனை பாசத்தால் அழவைத்து வருகின்றனர். இதன் ஒரு படியாக, குவாடனைப் போலவே வளர்ச்சி குறைபாடு கொண்ட பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் பிராட் வில்லியம்ஸ், குவாடனுக்காக 3 லட்சம் டாலர் வரை நிதி திரட்டத் தொடங்கி, ‘நாங்க இருக்கோம்டா கண்ணா!’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.