‘எனக்கு அந்த வேலைதான் வேணும்’!.. இதுவரை ஆண்கள் மட்டுமே பார்த்த வேலை.. விடா பிடியாய் நின்று ‘சாதித்த’ இளம்பெண்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐடிஐ படித்த இளம்பெண் ஒருவர் லைன் மேன் தேர்வில் வெற்றி பெற்று பல போராட்டங்களுக்கு பின் நாட்டின் முதல் லைன் வுமன் ஆகி அசத்தியுள்ளார்.
மின்துறையில் உள்ள வேலைகளுக்கு அலுவலக பணிக்காக மட்டுமே பெண்கள் விண்ணப்பித்து வந்தனர். அதற்கு காரணம், லைன் மேன் உள்ளிட்ட பணிகளில் மின்கம்பங்கள் அமைப்பது, அதில் ஏறி பழுதுபார்ப்பது போன்ற சிக்கலான வேலைகள் உள்ளன. அதனால் ஆண்கள் மட்டுமே லைன் மேனாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 20 வயது இளம்பெண் ஒருவர் நாட்டின் முதல் லைன் வுமானாக தேர்வாகி அசத்தியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாப்பூரி ஸ்ரீஷா என்ற இளம்பெண், ஐடிஐ தொழில் படிப்பை முடித்துள்ளார். இவர் அம்மாநிலத்தின் தெற்கு மின்துறை சார்பில் நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து லைன் வுமன் பணியை அவர் தேர்வு செய்துள்ளார். ஆனால் இதுவரை அதில் பெண்கள் பணிபுரிந்தது இல்லை என்பதால், ஸ்ரீஷாவுக்கு பணி வழங்கப்படவில்லை.
இதனால் கடந்த 2019ம் ஆண்டு அவர் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். தற்போது அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதனை அடுத்து நாட்டின் முதல் லைன் வுமன் ஆக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கு நிகராக 18 அடி மின்கம்பங்களில் சர்வசாதரணமாக ஏறி ஸ்ரீஷா அசத்தி வருகிறார்.
இதுகுறித்து தெரிவித்த ஸ்ரீஷா, ‘நான் ஐடிஐ படித்துள்ளேன். லைன் மேன் தேர்வு குறித்து முதலில் எனக்கு விழிப்புணர்வு இல்லை. அந்த வேலைக்கு ஆண்கள்தான் சரியானவர்கள் என கூறுகின்றனர். ஆனால் இந்த வேலையை நான் வாங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அதற்காக விண்ணப்பித்து தேர்வில் வெற்றியும் பெற்றிருந்தேன். இதற்காகவே மின்கம்பங்களில் ஏறி பயிற்சி பெற்றேன். ஆனால் எனக்கு வேலை மறுக்கப்பட்டதால் நீதிமன்றத்தை நாடி, தற்போது வேலை கிடைத்துள்ளது. எனக்கு இந்த வேலையை வழங்க உதவிய தெலுங்கானா முதல்வர் மற்றும் நீதிமன்றத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஸ்ரீஷா, அம்மாநிலத்திலுள்ள டாக்டர் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைகழகத்தில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.