"'33' வருஷ கனவு, இப்போ 'கொரோனா'வால நிஜமாயிடுச்சு"... "அப்படியே 'றெக்க' கெட்டி பறக்குற மாதிரி இருக்குங்க"... ஜாலி மோடில் 'திக்கு முக்காடி' போன 'முதியவர்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த நான்கு மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை செயல்படாமல் இருந்து வருகிறது.
இதன் காரணமாக, இந்தியாவின் சில மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், சமீபத்தில் தெலங்கானா மாநிலம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. தெலங்கானா அரசின் இந்த அறிவிப்பால் திக்கு முக்காடி போயுள்ளார் ஐதராபாத்தைச் சேர்ந்த 51 வயதான முகமது நூருதீன்.
பத்தாம் வகுப்புதேர்வை ரத்து செய்ததற்காக இவர் ஏன் மகிழ்ச்சியடைய வேண்டும் என நீங்கள் நினைக்கலாம். முகமது நூருதீன் கடந்த 1987 ஆம் ஆண்டு, முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். அப்போது தேர்ச்சி பெறாத நிலையில், கடந்த 33 ஆண்டுகளாக தொடர்ந்து இவர் தேர்ச்சி பெற வேண்டி முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால் அவரால் தேர்ச்சியடைய முடியவில்லை. தற்போது, தெலங்கானா அரசு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ள நிலையில், 33 ஆண்டுகால முயற்சி தற்போது நிறைவேறியுள்ளதால் அவர் மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளார்.
இதுகுறித்து முகமது நூருதீன் கூறுகையில், 'எனக்கு ஆங்கிலம் தான் சுத்தமாக வராது. அதில் மட்டும் தான் தேர்ச்சியடையாமல் இருந்து வந்தேன். தொடர்ந்து தோற்றாலும் மனம் தளராமல் முயற்சி செய்தேன். அதே போல, தேர்ச்சி பெறும் வரை விடாமல் எழுத வேண்டும் என முடிவு செய்திருந்தேன். நடப்பு ஆண்டில் ரெகுலர் கேட்டகிரியில் விண்ணப்பிக்க தவறி விட்டேன். இதற்காக அனைத்து பாடங்களையும் எழுத வேண்டும் என கூறியிருந்தனர். அதனையும் ஏற்றுக் கொண்டு, ஓப்பன் கேட்டகிரியில் விண்ணப்பித்தேன். எனக்கு ஹால் டிக்கெட்டும் வந்து விட்டது. அப்போது தான் மாநில அரசின் அறிவிப்பை பார்த்தேன். அதனால் நானும் தற்போது தேர்ச்சியாகி விட்டேன்' என மகிழ்ச்சி ததும்பி இருக்கும் முகமது நூருதீன், தனது 33 வருட கனவு நிஜமானதற்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்விற்கு நன்றி தெரிவித்துள்ளார்.