இன்ஸ்டாகிராமில் அறிமுகம்.. ‘அக்கா’னு தான் கூப்பிடுவான்.. ஆனா இப்படி ஏமாத்துவான்னு கொஞ்சமும் எதிர்பாக்கல.. பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம்பெண்ணிடம் பணத்தை சுருட்டிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.

நியூ டெல்லியின் புஷ்ப் விகார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அழகுகலை நிபுணராக பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவருக்கு லூசி ஹேரி என்ற ஆண் நண்பரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணை அக்கா என அழைத்த அவர், தன்னை இங்கிலாந்து குடிமகன் என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். அக்கா-தம்பி போல இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர். நாளுக்குநாள் இருவருக்கும் இடையிலான உறவில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட அந்த இன்ஸ்டாகிராம் தம்பி, அழகுகலை பெண் நிபுணருக்கு வெளிநாட்டு பணம் அடங்கிய பெட்டி ஒன்றை பரிசாக கொடுப்பதாக கூறியுள்ளார்.
இதனை அடுத்த சில நாட்களில், பணம் அடங்கிய பரிசுப்பெட்டி வந்துவிட்டதாகவும் உரிய கட்டணத்தை செலுத்தி பொருளை எடுத்துச் செல்லுமாறு சுங்க அதிகாரிகளிடமிருந்து தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதை நம்பிய அப்பெண், சுங்கவரி கட்டணம், வெளிநாட்டு பணப்பரிமாற்றத்துக்கான கட்டணம் என சுமார் 4 லட்சம் ரூபாயை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேலும் கொஞ்சம் பணம் அனுப்பி வைக்குமாறு அவர்கள் கேட்டுள்ளனர். அப்போது, தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த அப்பெண் உடனே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பெண்ணிடம் முதலில் நடந்தவற்றையெல்லாம் தீவிரமாக விசாரித்துள்ளனர். அப்போது தம்பி என நம்பியதாகவும், ஆனால் இப்படி மோசடி செய்வார் என கொஞ்சமும் நினைக்கவில்லை என அப்பெண் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வங்கி மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
இதுகுறித்து தெரிவித்த போலீசார், ‘அப்பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினோம். வங்கி கணக்கு நாகாலந்து மாநிலம் திமாபூர் பகுதியைச் சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அங்கிருக்கும் காவல்துறையினருக்கு வழக்கு விவரங்களை கொடுத்தோம். ஆனால் வங்கியில் கொடுக்கப்பட்ட தகவல் பொய் என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இன்ஸ்டாகிராம் நிர்வாகத்துக்கு அந்த போலி கணக்கு குறித்து நோட்டீஸ் அனுப்பினோம்.
இதனைத் தொடர்ந்து டெக்னிக்கல் டீமின் உதவியையும் நாடினோம். தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நியூடெல்லி ஜானகிபூரியை சேர்ந்த அமர்ஜீத் யாதவ் என்பவரை கைது செய்துள்ளோம். கொரோனா காலத்தில் 6 மாதங்கள் அவர் சிம்கார்டு விற்பனை செய்யும் விற்பனையாளராக பணியாற்றியுள்ளார். அப்போது நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பென்ஜமின் ஏக்னே என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இணைந்து இத்தகைய மோசடியில் ஈடுபட்டுள்ளனர்’ என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் நைஜீரியாவைச் சேர்ந்த பென்ஜமின் கொடுத்த ஐடியாவின் அடிப்படையிலேயே இந்த நூதன மோசடி நடைபெற்றிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மோசடியில் பிரபு என்பவருக்கும், வெளிநாட்டைச் சேர்ந்த ஜோசப் என்பவருக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளதாகவும், தலைமறைவாக இருக்கும் அவர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
