“வீட்லயே இருக்குறது கொஞ்சம் கஷ்டம்தான்... போர் அடிக்கும்.. நமக்கு வேற வழியில்ல!” - உத்தவ் தாக்கரே!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுன் உத்தரவு உங்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும் இருப்பினும் நமக்கு வேறு வழியில்லை, கொரோனாவில் இருந்த தப்பிக்க மக்கள் வீட்டில் இருந்துதான் ஆக வேண்டும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கொரோனாவுக்கு அதிகம் பேர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்துமுள்ளனர். இந்தநிலையில் நோய்த்தொற்றை தடுப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனைக்கென்று பிரத்யேகமாக தயார் படுத்தப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி காணொளி காட்சி மூலம் மாநில மக்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதனால் அவர்களுக்கு அலுப்பு தட்ட கூடுமென்றும், ஆனால் தங்களுக்கு வேறு வழி இல்லை என்றும் தங்களை மன்னிக்குமாறு தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் வீட்டில் இருந்துதான் ஆகவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தவிர ஏதேனும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் வழக்கமாக செல்லும் மருத்துவமனைகளை தவிர்த்துவிட்டு அரசாங்கத்தால் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் கொண்ட மருத்துவமனைகளை அணுகவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.