'நாட்டையே உலுக்கிய விசாகப்பட்டினம் வாயுக்கசிவு...' 'தடய அறிவியல் துறை ஆய்வு முடிவுகள்...' 'வெளியான அதிர்ச்சி தகவல்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | May 11, 2020 03:17 PM

நாட்டையே உலுக்கிய விசாகப்பட்டினம் வேதித் தொழிற்சாலை வாயுக்கசிவின் பின்னணியில் மனிதத் தவறு இருந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் தடய அறிவியல் துறை ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

Vizak gas leak- Shock information released by Forensic dpt.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த 7ஆம் தேதியன்று அதிகாலை எல்.ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டது. இது காற்றில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பரவியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி, தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டது. சாலையில் நடந்து சென்றவர்கள் கொத்து, கொத்தாக மயங்கி விழுந்தனர். இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய இந்த சம்பவத்தையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆந்திர மாநில தடய அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டினர்.

அதில் ஸ்டைரின் வாயு கசிந்ததற்கு மனிதத் தவறு தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தடய அறிவியல் துறையினர், "ஸ்டைரின் உடன் டெர்டியரி புடைல் கேடேஹால்(TBC) என்ற வேதிப்பொருளை சேர்க்க வேண்டும். இது ஸ்டைரினை தானாக வேதிமாற்றத்திற்கு உட்பட விடாமல் தடுக்கும்.

ஆனால் ஊரடங்கு நாட்களில் TBC வேதிப்பொருளை சேர்க்காமல் விட்டுவிட்டனர். இதனால் வேதிவினை நிகழ்ந்து வாயு நிலைக்கு மாறி 150 டிகிரி வரை வெப்பம் உருவாகியுள்ளது. ஊரடங்கில் குளிர்விக்கும் நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.

இவற்றையெல்லாம் சரிபார்க்க ஆபரேட்டர் ஒருவர் கட்டுப்பாட்டு அறையில் இருந்திருக்க வேண்டும். நாங்கள் ஆய்வு செய்வதற்கு சென்றிருந்த போது அங்குள்ள சேமிப்பு டேங்கின் வெப்பநிலை 120 முதல் 150 டிகிரி வரை இருந்தது. ஸ்டைரினின் கொதிநிலை 146 டிகிரி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு அலட்சியமாக தொழிற்சாலை செயல்பட்டிருக்கக் கூடாது" எனக் குறிப்பிட்டார்.