'குழந்தைகளை தூக்கிக் கொண்டு...' 'மூச்சுத் திணறலோடு ஓடினேன்...' 'நினைவிழந்த போது செத்துவிட்டதாகவே நினைத்தேன்...' உயிர்பிழைத்தவரின் அதிர்ச்சிகரமான நிமிடங்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | May 08, 2020 09:18 AM

விசாகப்பட்டினம் வாயுக்கசிவு விபத்தில் உயிர்பிழைத்தவர்கள், தங்களுடைய மோசமான அனுபவத்தை அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

shocking moments are expressed vizag gas accident

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன ஆலையில் திடீரென ஏற்பட்ட விஷ வாயுக் கசிவால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுடன் 1000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வாயுக்கசிவு விபத்தில் இருந்து உயிர்பிழைத்தவர்கள், தங்களுடைய மோசமான அனுபவத்தை அச்சத்துடன் கூறியுள்ளனர். கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஒருவர் கூறுகையில், '‘நான் உயிரிழந்து விட்டதாக நினைத்தேன். எப்படி உயிர் பிழைத்தேன் என எனக்கே தெரியவில்லை. தூங்கிக் கொண்டிருந்த போது எனக்கும், எனது குழந்தைகளுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 

நான் குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடினேன். வெளியே வந்து பார்க்கும் போது மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேகமாக ஓடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் நான் மூச்சுத்திணறி நினைவிழந்து மயக்கமடைந்தேன். அதனை நினைத்துப் பார்க்கும் போதே அச்சமாக இருக்கிறது’' என கண்கலங்க கூறினார்.

ஏற்கெனவே மக்கள் கொரோனா பீதியால் வீடுகளுக்குள் முடங்கிப் போயுள்ள நிலையில், தற்போது ஏற்பட்ட இந்த விபத்தால் விசாகப்பட்டின மக்கள் அச்சத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.