உத்திர பிரதேசத்தில் யாருக்கும் தெரியாமல் காதலியை சந்திக்க நினைத்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் உள்ளூர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல்
காதலில் இருக்கும் நபர்கள் தங்களது இணையை கவர பல வழிகளில் முயல்வதை பார்த்திருக்கிறோம். சர்ப்ரைஸாக பல திட்டங்களை யோசித்து அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்த துணிச்சலுடன் களத்தில் இறங்குபவர்களை பற்றியும் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சில சமயங்களில் இந்த பிளான்கள் சொதப்பிவிடுவதும் உண்டு. அப்படித்தான் சிக்கியிருக்கிறார் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
உத்திர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்தவர் சைஃப் அலி. இவரும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில், அலிக்கு புதிய வேலை ஒன்று கிடைத்திருக்கிறது. இதற்காக வெளியூர் செல்ல முடிவெடுத்திருக்கிறார் அலி. தனது காதலியை விட்டு பிரிந்து செல்வதை நினைத்து கவலையடைந்த அலி, ஊருக்கு போவதற்கு முன்னர் தனது காதலியை சந்திக்க முடிவெடுத்திருக்கிறார்.
புர்கா
அண்டை கிராமமான மெஹ்மத்பூர் கிராமத்தை சேர்ந்த தனது காதலியை யாருக்கும் தெரியாமல் சந்திக்க அலி திட்டமிட்டிருக்கிறார். அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு தன்னை தெரியும் என்பதால் தன்னுடைய அடையாளத்தை மறைத்துக்கொண்டு காதலியை சந்திக்க அவர் நினைத்திருக்கிறார். அப்போதுதான் புர்கா அணிந்து செல்லும் யோசனையும் அவருக்கு வந்திருக்கிறது. இதனையடுத்து புர்கா அணிந்துகொண்டு தனது காதலியை சந்திக்க சென்றிருக்கிறார் அலி.
கிராமத்துக்குள் நுழைந்த அலி, நேரடியாக அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். இருப்பினும் அந்த குடும்பத்தில் இருந்த சிலருக்கு அலி மீது சந்தேகம் வந்திருக்கிறது. இதனையடுத்து அவரை பெண்ணின் உறவினர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். புர்காவை அகற்றும்படி கூறியிருக்கிறார்கள். அப்போது அலியை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் அங்கிருந்த அனைவரும். இதனை தொடர்ந்து காவத்துறைக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
புகார்
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர் அலியை கைது செய்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் பாஜ்பேய்,"அலியும் அந்த பெண்ணும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர். ஊருக்கு செல்வதற்கு முன்னர் தனது காதலியை சந்திக்க நினைத்திருக்கிறார் அலி. அவருக்கு புர்கா அணிந்துவரும்படி அந்த பெண் ஆலோசனை கூறியிருக்கிறார். ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் அலியை சந்தேகித்ததன் அடிப்படையில் அவர் பிடிபட்டிருக்கிறார்" என்றார்.
இந்நிலையில், அலி மீது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | ட்விட்டர் வழக்கு.. எலான் மஸ்க் வைத்திருக்கும் மாஸ்டர் பிளான்.. இத யாருமே யோசிச்சிருக்க கூட மாட்டாங்க..!