சூடுபிடிக்கும் பிரிட்டன் பிரதமர் தேர்தல்.. மனைவியுடன் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரிஷி சுனக்.. வைரல் புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன் பிரதமர் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேட்பாளர்களில் ஒருவரான ரிஷி சுனக் தனது மனைவியுடன் உள்ளூர் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்றார். இந்நிலையில், பல்வேறு சிக்கல்கள் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிக்க இருப்பதாகவும் அறிவித்தார். இதனையடுத்து கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பிரதமர் பதவிக்கு போட்டிபோட்ட நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு செயலாளர் லிஸ் டிரஸ் ஆகியோர் இறுதிகட்ட தேர்தலில் களம் காண்கின்றனர்.
ரிஷி சுனக்
இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்டன் பகுதியில் பிறந்த ரிஷி சுனக், வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றார். முன்னணி தொழிலதிபரான நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து பின்னர் மணம் முடித்துக்கொண்டனர். இருவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 2015 ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த ரிஷி, குறுகிய காலத்தில் பல உயரங்களை அடைந்தார். போரிஸ் ஜான்சன் பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தின் நிதியமைச்சர் பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது.
கோகுலாஷ்டமி
கிருஷ்ணரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது இந்த கோகுலாஷ்டமி பண்டிகை. இந்த நாளில் வீட்டில் உள்ள குழந்தைகளை கிருஷ்ணர் போல அலங்கரித்து வீட்டில் வழிபாடு செய்கின்றனர் மக்கள். இந்நிலையில், நேற்று தனது மனைவி அக்சதா உடன் உள்ளூரில் உள்ள இஸ்கான் கோவிலில் வழிபாடு செய்திருக்கிறார் ரிஷி. இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிஷி,"கிருஷ்ணரின் பிறந்தநாளைக் கொண்டாடும் பிரபலமான இந்து பண்டிகையான ஜென்மாஷ்டமியைக் கொண்டாட இன்று நான் என் மனைவி அக்ஷதாவுடன் பக்திவேதாந்த மனோர் கோயிலுக்குச் சென்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கோவிலில் வழிபாடு செய்யும் ரிஷி மற்றும் அவரது மனைவியின் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Today I visited the Bhaktivedanta Manor temple with my wife Akshata to celebrate Janmashtami, in advance of the popular Hindu festival celebrating Lord Krishna’s birthday. pic.twitter.com/WL3FQVk0oU
— Rishi Sunak (@RishiSunak) August 18, 2022