35 வருஷமா அமெரிக்க காவல்துறைல இருந்த உளவாளி?.. இவ்வளவு நாளுக்கு அப்பறம் சிக்கிய தம்பதிகள்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரே போட்டோ தானாம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் போலியான அடையாளங்களுடன் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Also Read | "சென்னை நினைவுகள்.. மறக்க முடியாத பயணம்".. நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ..!
வால்டர் ப்ரிம்ரோஸ் மற்றும் அவரது மனைவி க்வின் மோரிசன், இருவரும் 1955 இல் பிறந்தவர்கள். இருவரும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 1970 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்திருக்கின்றனர். அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்திருக்கிறார்கள். ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக 1987 ஆம் ஆண்டு தங்களுடைய இருவரது அடையாளங்களையும் மாற்றியிருக்கிறார்கள். இதுதான் இப்போது அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுப்பெயர்
1987 ஆம் ஆண்டு பாபி ஃபோர்ட் மற்றும் ஜூலி மாண்டேக் ஆகிய இரு குழந்தைகள் இறந்திருக்கின்றன. அவர்களது உடல் அருகில் உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த இந்த தம்பதியினர் அந்த இரு குழந்தைகளின் பெயர்களையும் தங்களுக்கு சூட்டி, அவர்களை போலவே வாழ்ந்துவந்திருக்கிறார்கள். அதுமட்டும் அல்லாமல் அதே பெயரைக்கொண்டு வாகன உரிமம், பாஸ்போர்ட்கள் ஆகிய ஆவணங்களையும் பெற்றிருக்கிறார்கள் இந்த தம்பதியினர்.
இதற்கெல்லாம் உச்சமாக வால்டர் தனது பெயரை பாபி ஃபோர்ட் என மாற்றிய பின்னர் அமெரிக்காவின் கடலோர காவல்துறையில் சேர்ந்திருக்கிறார். 1994 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த இவர் 2016 ஆம் ஆண்டு பணியில் இருந்து விலகியிருக்கிறார். அதன்பிறகு பாதுகாப்பு துறை ஒப்பந்ததாரராகவும் பணிபுரிந்திருக்கிறார் அவர். இதனிடையே சமீபத்தில் ஹவாயில் வைத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
புகைப்படம்
இந்நிலையில் அவர்களுடைய வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அதிகாரிகளுக்கு ஒரு புகைப்படம் கிடைத்திருக்கிறது. அதில் இருவரும் KGB சீருடைகளை அணிந்திருக்கிறார்கள். KGB என்பது ரஷ்ய பாதுகாப்பு படை ஆகும். இதுதான் இந்த வழக்கை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. இருப்பினும், இருவர் மீதும் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இருவரும் உளவு பார்த்ததாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், இருவருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
இந்நிலையில் மோரிசனின் உறவினர் இந்த புகைப்படம் பற்றி பேசுகையில்,"மோரிசன் சில காலம் ரோமானியாவில் வசித்துவந்தார். அப்போது கம்யூனிஸ்ட் பிரிவில் அவர் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது" என சொல்லியிருக்கிறார். இந்நிலையில், இந்த தம்பதியின் வழக்கறிஞர் இந்த குற்றச்சாட்டை மறுப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் அடையாளங்கள் மறைத்து, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வாழ்ந்து வந்ததாக இருவர்மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதுகுறித்த நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.