‘பிறந்த குழந்தைக்கு நடந்த பயங்கரம்..’ காட்டிக் கொடுத்த சிசிடிவி பதிவு..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Jul 20, 2019 08:47 PM
ஹரியானா மாநிலம் கைத்தால் என்ற இடத்தில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் சாக்கடையிலிருந்து பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கைத்தால் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் சில எதையோ பார்த்து விநோதமாகக் குரைத்துள்ளன. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த நாய்களுக்கு நடுவே பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று இருந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். அதிலிருந்து அதிகாலை 4 மணியளவில் பெண் ஒருவர் பை ஒன்றை சாக்கடையில் வீசிச் செல்வதும், சிறிது நேரத்தில் அதே இடத்திலிருந்து தெரு நாய்கள் அந்தப் பையை எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் போலீஸார் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தை உயிரோடு இருப்பதாகவும், தலையில் அடிபட்டிருப்பதால் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.