"காசியும் தமிழகமும் ஒன்றுதான்".. தமிழில் ட்வீட் செய்த யோகி ஆதித்யநாத்.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாவாரணாசியில் இன்று துவங்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வை முன்னிட்டு, உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம் நிகழ்வு கொண்டாடப்படுகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் இந்த நிகழ்ச்சி இன்று துவங்கி டிசம்பர் 16 வரை நடைபெற இருக்கிறது. காசி மற்றும் தமிழகம் இடையே பன்னெடுங்காலமாக இருந்து வரும் அறிவு பிணைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக இந்து பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
காசி மற்றும் தமிழக மக்களிடையே உள்ள உறவை ஆழப்படுத்த இந்த நிகழ்ச்சி உதவும் என உத்திரபிரதேச அரசு தெரிவித்திருக்கிறது. இதனை முன்னிட்டு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களை வரவேற்றுள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அந்த பதிவில்,"காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான். 'காசி தமிழ் சங்கமம்' ஆனது இந்த 'ஒன்றுபட்ட நிலை’யின் புனிதமான மற்றும் வளமான உணர்வை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான ஊடகம். அன்பென்ற உணர்வு இழைகளினால் இந்தியா முழுவதையும் பிணைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வரவேற்பு. பாபா விஸ்வநாதரின் புண்ணிய ஸ்தலத்தில் 'காசி-தமிழ் சங்கமம்' விழாவிற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும்/பிரமுகர்களுக்கும் அன்பான வரவேற்பு. இந்த விழா மரியாதைக்குரிய பிரதமரின் 'ஏக் பாரத்-ஷ்ரேஷ்டா பாரத்' உறுதிமொழிக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும். இந்த நிகழ்வு இந்தியாவின் கலாச்சார நாகரிகத்தில் 'ராம சேது' போலவே இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் ஆகியவை நடைபெற இருக்கின்றன.மேலும், இரு மாநில கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கின்றன. ஒருமாத காலம் நடைபெற இருக்கும் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சுமார் 2500 பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த நிகழ்வை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து 13 ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.
காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்.
'காசி தமிழ் சங்கமம்' ஆனது இந்த 'ஒன்றுபட்ட நிலை’யின் புனிதமான மற்றும் வளமான உணர்வை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான ஊடகம்.
— Yogi Adityanath (@myogiadityanath) November 16, 2022