'சுடச்சுட இலவச சிக்கன் 65...' 'கோழிக்கறி சாப்பிட்டா கொரோனாலாம் வராதுங்க...' மக்கள் குவிந்ததால் டிராபிக் ஜாம் ஆன புதுச்சேரி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோழிக்கறி மற்றும் முட்டை மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதாக வாட்ஸப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாக வதந்திகள் அதிகமாக பரவியது. இதனால், கோழி மற்றும் முட்டையின் விலை அதிக அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி சுல்த்தான்பேட்டை சேர்ந்த நசீர் அகமது என்பவர் இப்பகுதியில் கோழி மற்றும் முட்டை கடை நடத்தி வருகிறார். கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா வரும் என்ற வதந்தி பொய்யானது என விழிப்புணர்வை உண்டாக்க திட்டம் தீட்டினார்.
கோழி கறி சாப்பிடுவதால் ஆபத்து இல்லை என்பதை விளக்க, நல்ல எண்ணெயில் சிக்கன் 65 சுடச்சுட இலவசமாக வழங்கினார். இதனை ஏராளமானோர் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். மேலும் முட்டையும் மிக குறைந்த விலையில் விற்றார்.
30 முட்டைகள் வெறும் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ சிக்கன் 70 ரூபாய்க்கும் உயிருடன் கோழி 50 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நாமக்கலில் 10 கோடி முட்டை தேங்கியுள்ளதால் குறைந்த விலையில் முட்டை விற்றதாக கடை உரிமையாளர் நசீர் அகமது தெரிவித்தார். சிக்கன் 65 மற்றும் முட்டையை வாங்க கூட்டம் அலை மோதியதால் அந்த பகுதியில் பயங்கரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
