‘பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க எந்தெந்த மாநிலங்கள் பக்கபலமாக இருந்துள்ளது தெரியுமா’?.. முழுவிவரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Arunachalam | May 24, 2019 12:49 PM
17 வது மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாக நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில், பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில், பாஜகவின் வெற்றிக்கு மேற்கு மற்றும் மத்திய மாநிலங்கள் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளது.
இதில், இந்தியாவின் மேற்கு மற்றும் மத்திய மாநிலங்களான உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 62 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. மாயாவதியும், அகிலேஷ் யாதவும் வாக்குகளைப் பிரிப்பார்கள் என்ற கணிப்புகள் அனைத்தும் தவிடுபொடியானது.
இதேபோல், மகாராஷ்ராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி 41 இடங்களை கைப்பற்றியுள்ளது. பீகாரில் 40 இடங்களில் ஒரு இடத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களையும் பா.ஜ.க.- ஐக்கிய ஜனதாதளக் கூட்டணி வென்றுள்ளது.
மேலும், மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தாலும், இந்த தேர்தலில் ஒரு தொகுதி தவிர 28 தொகுதிகளையும் பா.ஜ.க.வே வென்றுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியபோதும், தற்போது முழு வெற்றியை ஈட்டியுள்ளது. அதேபோன்று, 12 ஆண்டுகள் மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் மாநிலம் கடந்த முறையைப் போன்றே, 26 தொகுதிகளை அப்படியே அள்ளித் தந்திருக்கிறது.
இதேபோல,மேற்கு வங்கத்தில் காலூன்றியுள்ள பா.ஜ.க. முதன்முறையாக 12 இடங்களில் வென்றுள்ளது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் 7 தொகுதிகளையும் வழங்கிய மக்கள், மோடியின் ஆட்சிக்கு ஏகோபித்த ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, உத்தரகாண்டில் 5 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், காஷ்மீரில் 3 தொகுதிகள் அருணாசலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் 2 தொகுதிகள், கோவா, சண்டிகர், அந்தமான்- நிகோபார், டாமன்-டையு ஆகிய இடங்களில் தலா ஒரு தொகுதிகளில் பாஜகவுக்கே வெற்றி கிடைத்துள்ளது.
இந்நிலையில், பாஜகவின் அமோக வெற்றிக்கு இந்தியாவின் மேற்கு மற்றும் மத்திய மாநிலங்கள் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளது.
