"மிருகத்த விட கேவலாக நடத்துறீங்களே!".. கொரோனா நோயாளிகள் நிலை குறித்து... தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை... கிழித்து எடுத்த உச்ச நீதிமன்றம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை விலங்குகளை விட மோசமாக நடத்துவதாக உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து 3வது இடத்தில் உள்ள, டெல்லியில் இதுவரை 34687 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1085 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஜூலை 31 ஆம் தேதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் வரை தொற்று எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை சமாளிக்க அரசு தயாராக இருப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், கொரோனா நோயாளிகளை கையாளும் விதம், உடல்களை அலட்சியமாக தூக்கிப் போடும் மனிதாபிமானமற்ற செயல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, கொரோனா நோயாளிகளை விலங்குகளை விட மோசமாக நடத்துவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
'டெல்லியில் நிலைமை மோசமானதாகவும், அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் மாறி வருகிறது. நோயாளிகள் இறந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு யாரும் இல்லை.
கொரோனா வைரசை தடுக்கும் பணியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மாநில அரசு பின்பற்றுவதில்லை. மருத்துவமனைகளின் நிலைமை வருந்தத்தக்க வகையில் உள்ளது. இறந்துபோனர்களின் உடல்களை கையாள்வதில் உரிய கவனிப்பையும் அக்கறையையும் கொடுப்பதில்லை.
டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், லாபி மற்றும் காத்திருப்பு பகுதியில் உடல்கள் இருந்ததாகவும், வார்டுக்குள் பெரும்பாலான படுக்கைகள் காலியாக இருந்ததாகவும் தகவல் வந்துள்ளது.
தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் சோதனை எண்ணிக்கையை 16,000-ல் இருந்து 17,000 ஆக உயர்த்திய நிலையில், டெல்லியில் மட்டும் ஒரு நாளைக்கு சோதனை எண்ணிக்கை 7,000ல் இருந்து 5,000 ஆக குறைந்தது ஏன்? இது தொடர்பாக மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
டெல்லி மருத்துவமனைகள் மட்டுமின்றி மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கூட மோசமான நிலை தான் நிலவுகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் எந்த அளவுக்கு உள்ளன, மருத்துவ ஊழியர்கள், மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு இருக்கிறதா என்பதை விளக்க நோட்டீஸ் அளிக்க உத்தரவிடுகிறோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மற்ற செய்திகள்
